
ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் திங்கள் கிழமை நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டத்தை பொறுத்தவரையில் கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையின் பொழுது ஆண்டுதோறும் பொது மக்கள் சாதி மத பேதமின்றி தாமிரவருணி ஆற்றில் உள்ள மணலில் விளையாடி மகிழ்ந்தனர். காலப்போக்கில் கருவேல மரங்களின் வளர்ச்சியால் மணல் பகுதி வெளியில் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் ஒன்று கூடி விளையாடி மகிழ்வது நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், அணைப் பகுதியில் படகுகுழாம் அமைக்க வேண்டும். சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் போதிய போழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத வளர்ச்சி அடையாத நகரமாக ஸ்ரீவைகுண்டம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இரண்டு பாலங்களின் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களை அகற்றி, பொது மக்கள் பொங்கல் பண்டிகையையும் சித்திரை திருவிழாவும் கொண்டாடும் வகையில் அப்போதைய வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் நடவடிக்கை எடுத்தார்.
இதைபோல், ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் திங்கள் கிழமை நடக்கிறது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் சார்ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். வட்டாட்சியர்கள் சந்திரன்(ஸ்ரீவைகுண்டம்), அற்புதமணி(ஏரல்), குருசுகோயில் பங்குத் தந்தை மரியவளன், ஜமாத் தலைவர் ஷாஜகான், பெருங்குளம் செங்கோல் ஆதினம், தொழிலதிபர் அருணாசல மூப்பனார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவை முன்னிட்டு திங்கள் கிழமை காலை 6மணிக்கு சமத்துவ பொங்கல் இடுதல் நடைபெறுகிறது. காலை 7மணிக்கு விவசாயிகள் கௌரவிக்கப்படுகின்றனர். காலை 10மணிக்கு நாட்டுபுறப்பாட்டு, கணியான்கூத்து, கரகாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 11.30 மணிக்கு காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் பட்டாணி(ஏரல்), ஜோசப் ஜெட்சன்(ஸ்ரீவைகுண்டம்), ராகுராஜன்(செய்துங்கநல்லுர்), ஜுன்குமார்(ஆழ்வார்திருநகரி), லெட்சுமி பிரபா(அனைத்து மகளிர் காவல் நிலையம்) ஆகியோரது தலைமையில் காவல் துறையினர் செய்துள்ளனர்.