
ஸ்ரீவைகுண்டத்தில் சமத்துவ பொங்கலில் தூத்துக்குடி சப்கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் கலந்துகொண்டு ஏர்கலப்பை பிடித்து உழுது, பெண்களோடு நாற்று நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் சமத்துவ பொங்கல் விழா சிவன் கோயில் அருகில் உள்ள வளாகத்தில் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் முன்னிலை வகித்தனர். செங்கோல் மட ஆதீனம், ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் பங்குத் தந்தை மரியவளன், ஏரல் பங்கு தந்தை, ஜமாத் தலைவர் ஷாஜகான், ஆகியோர் ஆசியுரையாற்றினர்.
சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அருகில் உள்ள வயல்வெளிகளில் புதிதாக தாயார் செய்யப்பட்ட வயலில் ஏர் கலப்பை பூட்டி, அதை சப்கலெக்டர் சகதியில் இறங்கி துவங்கி வைத்து மாட்டை ஓட்டினார். அவருடன் டி.எஸ்.பி சுரேஷ்குமார் மற்றும் தாசில்தார் சந்திரனும் பின் தொடர்ந்தனர்.
அதன் பின் அங்கே நாற்று நட்ட பெண்களிடம் நாற்றை வாங்கி சப் கலெக்டர் உள்பட வி.ஐ.பிகள் நாற்று நட்டனர்.
இதுகுறித்து சார்ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் கூறும் போது எனக்கு பஞ்சாப் மாநிலம் சொந்த ஊராகும். அங்கேயும் இதே நேரத்தில் வேறு ஒரு பெயரில் விவசாயிகளுக்கான விழா கொண்டாடப்படும். அந்த விழாவும் விவசாயிகளை போற்றும் விழாவாகும். இங்கும் பொங்கல் திருவிழா விவசாயிகள் திருவிழாவாக கொண்டாப்படுகிறது, எனவே அவர்களை பெருமை படுத்தும் விதத்தில் நாங்களும் சேற்றில் இறங்கி இந்த விழாவை கொண்டாடினோம். என்று அவர் கூறினார்.
விழாவில் நாட்டுபுறப்பாட்டு, கணியான்கூத்து, கரகாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்சி நடந்தது. யோகா, சிலம்பாட்டம் உள்பட தமிழர்கள் பண்பாட்டு வி¬ளாயாட்டுகள் நடத்தப்பட்டது. மாட்டு வண்டியில் சிறுவர்களை ஏற்றி கொண்டு அந்த மைதானத்தினை சுற்றி வந்தனர். கலைநிகழ்ச்சியில் பொதுமக்களை உற்சாக படுத்தும் விதத்தில் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலை கச்சேரியில் டிஎஸ்.பி சுரேஷ் குமார் பாடினார். இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து அவர் மாட்டு வண்டியை ஓட்டியபடி மைதானத்தினை சுற்றி வந்தார். பெண்களுக்கான விளையாட்டுகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் நடந்தது. செய்துங்கநல்லூர் காவலர் சுடலைகண்ணு கச்சேரியில் பாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதுபோலவே சிறுவர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின் அனைத்து கலைஞர்களையும் மேடையில் ஏற்றி கௌரவித்தனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், முக்கிய பிரமுகர்கள கௌரவிக் கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் அருணாசல மூப்பனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் ஏரல் பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் ஜோசப் ஜெட்சன், செய்துங்கநல்லூர் ரகுராஜன், ஆழ்வார் திருநகரி ஜுன்குமார், அனைத்து மகளிர் காவல் நிலையம் லெட்சுமி பிரபா ஆகியோரது தலைமையில் காவல் துறையினர் செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் சிறப்பாக கொண்டாப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தை பொறுத்தவரையில் கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் பொது மக்கள் சாதி மத பேதமின்றி தாமிரவருணி ஆற்றில் உள்ள மணலில் விளையாடி மகிழ்ந்தனர். காலப்போக்கில் கருவேல மரங்களின் வளர்ச்சியால் மணல் பகுதி வெளியில் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் ஒன்று கூடி விளையாடி மகிழ்வது நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், அணைப் பகுதியில் படகுகுழாம் அமைக்க வேண்டும். சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் போதிய போழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத வளர்ச்சி அடையாத நகரமாக ஸ்ரீவைகுண்டம் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இரண்டு பாலங்களின் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களை அகற்றி, பொது மக்கள் பொங்கல் பண்டிகையையும் சித்திரை திருவிழாவும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இவ்விடத்தில் சல்லிகட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.