விடிலிக்காடு – காமராசு செல்வன்

200.00

Description

விடிலிக்காடு நாவல் எனது இரண்டாவது நாவல். மூன்றாவது நூல். முதலில் எனது குருநாதர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதிய மேடை நாடங்களை தொகுத்து முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் என்ற முதல் நூல் எழுதினேன். அதைத் தொடர்ந்து நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரை பற்றி எழுத வேண்டும் என்று எழுதிய நூல் தான் குடிமவன். தென்மாவட்டங்களில் குறிப்பிட சில சமுதாயத்திற்கு மட்டுமே உரியவன். அந்த கிராமங்களில் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டாலும் அவன் இல்லாமல் சில சடங்கு சம்பிரதாயங்கள் அனுவும் அசையாது. இந்த நூல் கடந்த வருடம் தினமலர் நாளிதழின் பதிப்பகமான தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் மூலம் வெளிவந்தது.
இதையடுத்து தான் அடுத்த நூல் எப்போது எழுதப்போகிறாய் என்று கேட்டார் எனது குருநாதர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள். நான் நீங்கள் கூறுங்கள் எழுத முயற்சிக்கிறேன் என்று கேட்டேன்.
அதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் பனைமரக்காடுகளுக்கு இடையே குடிசை அமைத்து பனை ஏறும் தொழில் செய்து வந்தார்கள். அவர்களது முழு தொழிலும் இந்த பனை மட்டும் தான். அவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களே பூர்த்தி செய்து விடுவார்கள். படிப்பறிவு பெரிய அளவில் இருக்காது. காட்டுக்குள் எந்தவித மின் விளக்குகளும் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் காலத்தை ஓட்டுவார்கள். அவர்களுக்கு குழந்தைகள் ஆறு ஏழு இருக்கும். சிலருக்கு பண்ணிரெண்டு வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காட்டுக்குள்ளே இருக்கும் அவர்களது குழந்தைகள் பாம்பு போன்ற விஷ சந்துகளால் தீண்டப்பட்டு உயிரிழப்பார்கள். இவை எல்லாம் இவர்களது வாழ்க்கை முறை. இதைப்பற்றி ஒரு நாவல் எழுது என்று கூறினார்கள்.
சரி என்று நானும் எனது குருநாதர் கூறியதை வைத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் பனை ஏறும் தொழில் செய்து வரும் குடும்பத்தை மட்டும் சொல்லாமல் பனை ஏறுவது எப்படி? பனை கருப்பட்டி காய்ப்பது எப்படி? பனையால் என்னென்ன பயன்கள் உள்ளது? என்பது குறித்து அதிக அளவில் இந்த நாவலில் தகவல்கள் திரட்டினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
அதற்காக யாரிடம் சென்று இதுபோன்ற தகவல்களை கேட்கலாம் என்று நினைத்தேன். முப்பது வருடத்திற்கு முந்தைய தகவல்கள் என்றால் தற்போது அறுபது, எழுபது வயது இருக்கும் முதியவர்களிடம் தான் இந்த தகவல்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்டால் தான் இதற்கான விபரம் கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் தெரிந்தவர்கள் என்று யாரும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தான் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் செய்தியாளராக இருக்கும் போது ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசர்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கிருஷ்ணபெருமாள் என்பவர் பனை ஏறி பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ப்பதாக தகவல் தெரிந்தது.