தேவேந்திர வேளாளர் கோரிக்கையை நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என கருங்குளம் ஒன்றிய பகுதியில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி மக்களிடையே பேசினார்.
ஒட்டபிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார்.
இவர் வி.கோவில்பத்து, இசக்கியம்மன் கோயில் , கீழ நாட்டார்குளம், கொள்ளீர்குளம், முத்தாலங்குறிச்சி, வள்ளூவர் காலனி, அனவரதநல்லூர், வசவப்பபுரம் அம்பேத்கார் காலனி உள்பட பல பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசும் போது நான் இந்த பகுதியில் எம்.எல்.எ வாக இருந்த போது நீர் நிலைகளை பாதுகாக்க மற்றும் குளங்களை மேம்படுத்த பல லட்ச ரூபாய்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து வழங்கினோம். மடைகள் கட்டப்பட்டன. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோலவே தொடர்ந்து நல்ல திட்டங்கள் நிறைவேற்ற அதிமுக கட்சிக்கு வாக்களியுங்கள். தொடர்ந்து நமது சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர் என மாற்றி அமைக்க தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளார்கள். தாங்கள் தரும் ஆதரவு மூலம் வெற்றி பெற்ற 1 வாரத்துக்கு அதை நிறைவேற்றி தருவார்கள். எனவே உங்களதுஒட்டு மொத்த வாக்குகளை அதிமுகவிற்கு அளியுங்கள் என பேசினார். அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், அய்யாத்துரைபாண்டியன், புதிய தமிழகத்தின் திண்டுகல் மாவட்ட செயலாளர் இளையராஜா, மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கண்ணன், ஒன்றிய பொறுப்பாளர் தங்கராஜ், கனி, சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
டாக்டர் கிருஷ்ண சாமி பிரச்சாரம் செய்யும் இடம் செய்துங்கநல்லூர் மற்றும் முறப்பநாடு காவல் நிலையத்துக்கு உள்பட்ட இடமாகும். இதில் இவர் பிரச்சாரம் செய்யும் இடம் முறைப்படி போலிசாருக்கு தகவல் கொடுக்க வில்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் வள்ளுவர் காலனியில் வைத்து வாகனங்களை முத்தாலங்குறிச்சி செல்ல விடாமல் தடுத்தனர். அதன் பின் அவ்விடத்தில் விட்டிலாபுரம், கொள்ளீர்குளம், முத்தாலங்குறிச்சி வடக்கு ஊர் ஆகிய இடங்களில் அவர் பேச அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதை முறைப்படி கொடுத்த பிறகே போலிசார் அவர்களை வாகனங்களை செல்ல அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


