நட்டாத்தி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.16.53 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி.சுதாகலா தலைமையில் இன்று (26.01.2020) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பார்வையாளராக கலந்து கொண்டு 17 பயனாளிகளுக்கு ரூ.16.53 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளை பெறுதல் முழு சுகாதார தமிழகம், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளை பாராட்டுதல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், சுகாதாரதம் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பிரதமமந்திரி காப்பீட்டு திட்டங்கள் குறித்தும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு குறித்த பல்வேறு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விவாதிக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி தலைவர், திருவைகுன்றம் ஒன்றிய குழுத் தலைவர், ஒன்றியக் குழு துணைத்தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அப்போது தான் நோய்கள் வராமல் தடுக்க முடியும். போசான் அபியான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் கர்ப்பினி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு சரியான ஊட்டசத்துடன் கூடிய உணவுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் உட்பட அனைவரும் ஆரோக்கியம் மேம்படும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை அமைத்து அவைகளை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமாக இருந்தால்தான் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். இன்று இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் பச்சை மற்றும் சிகப்பு நிறம் உள்ள குப்பை கூடைகள் வழங்கப்படுகிறது.
நீங்கள் வீடகளிலேயே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பகைளை தரம் பிரித்து வழங்கினால் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யவும் எளிதாக இருக்கும். கிராமப் புறங்களும் மிக சுத்தமாக இருக்கும். டெங்கு விழிப்புணர்வு பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு நல்ல நீரில் தான் வளரும் என்பதால் அவைகளை முடி வைத்து பயன்படுத்த வேண்டும். குடிநீரை சிக்கனமாகவும் போதுமான அளவில் பயன்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிய பணிகள் வழங்கப்பட்டு முழு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மட்டுமின்றி கிராம வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களும் சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கிராமம் குப்பைகளை தரம் பிரித்து கையாள்வதில் மாதிரி கிராமமாக மாநில மற்றும் தேசிய அளவில் பல்nவேறு விருதுகளை பெற வேண்டும். அதற்கு பொது மக்கள் உத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளையும், முதலமைச்சரின் சூரிய ஒளி மின்சக்கதியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் 2 நபர்களுக்கு முதல் தவணை தொகையாக தலா ரூ.33,000/- வழங்கினார். மேலும், அரசு திட்டத்தில் வீடுகட்ட இயலாத ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் தங்க மனசு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- மதிப்பிலான செங்கல் கற்களை வழங்கினார். மேலும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு மாட்டுக் கொட்டை அமைக்கும் வேலைகளுக்கான உறுதி கடிதத்தினையும் வழங்கினார். மேலும் 500 வீடுகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்திலான குப்பை கூடைகளையும், பொது மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப் பைகளையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பட்டின்டிவிளை கிராமத்திற்கு மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை பிரித்து கையாளும் தள்ளு வண்டிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், திருவைகுண்டம் ஒன்றிய குழுத் தலைவர் வசந்த சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குநர் விநாயக சுப்பிரமணியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு.கிருஷ்ண லிலா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு.சத்யநாரயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், நாகராஜ்,ஒன்றிய குழுத் துணைத் தலைவர் விஜயன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


