தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக உறைகிணறு அமைக்கப்படும் என்று ஆறாம்பண்ணை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசு தினவிழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆறாம்பண்ணை கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அப்துல்கனி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஹரிகரசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார். கருங்குளம் யூனியன் உதவியாளர் ஆயிஷா சிறப்பு அதிகாரியாக கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், ஆறாம்பண்ணை பஞ்சாயத்திலுள்ள அனைத்துப்பகுதி மக்களுக்கும் எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி குடிநீர் வழங்கிட ஏதுவாக தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக உறைகிணறுகள் அமைப்பது, சேதமான நிலையிலுள்ள அனைத்து தெருக்களிலும் புதியதாக பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது என்றும், எரியாத தெருவிளக்குகளை உடனடியாக மாற்றி அமைப்பது என்றும், பஞ்சாயத்தின் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் இல்லாதவகையில் கூடுதலாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர் கூறியதாவது, பஞ்சாயத்திலுள்ள அனைத்து மக்களின் குடிநீர், மின்விளக்கு வசதி, பசுமை வீடு திட்டம் என அனைத்து கோரிக்கைகளும் துரிதமாக நிறைவேற்றி கொடுக்கப்படும். பொதுமக்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்த்து ஆறாம்பண்ணை பஞ்சாயத்தை பாலிதின் பொருட்கள் பயன்பாடு இல்லாத பஞ்சாயத்தாகவும், சுத்தமான, சுகாதாரமான பஞ்சாயத்தாகவும் மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்திடவேண்டும் என்றார்.இதில், வார்டு உறுப்பினர்கள் இப்ராகிம், மகேஷ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


