நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என வல்லநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜி பேசினார்.
வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கடம்பூர் ராஜி நிருபர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது.
தமிழ்நாட்டில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு 65 மணி மண்டபங்களையும், நான்கு நினைவு தூண்களையும் உருவாக்கியவர் மாண்புமிகு அம்மா, அவர் வழியில் எடப்பாடியார் அரசு அவர்களின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வல்லநாட்டில் வீரன் வெள்ளையத்தேவன் சிலையை வெண்கல சிலையாக மாற்றி தரவேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். தற்போது நடைபெறவுள்ள நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெல்லும். ஏன் என்றால் கடந்த தேர்தலில் நாங்கள் ஜெயித்த 9 தொகுதிகளில் 5 தொகுதி தென்மாவட்டத்தில் தான் உள்ளது. எனவே எங்களுக்கு செல்வாக்கு கொண்ட தென் தமிழகத்தில் நான்குநேரி தொகுதி இருப்பதால் எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். இன்றைக்கு வறட்சி கோரதாண்டவமாடுகிறது. எனவே 65 லட்சம் பேருக்கு தலா இரண்டாயிரம் வழங்கும் திட்டத்தினை அதிமுக அரசு கொண்டு வந்தது. அதற்காக திமுகவினர் நீதி மன்றம் சென்றனர். அவர்கள் தடையை உடைத்து விரைவில் மக்களுக்கு அந்த இரண்டாயிரம் பணம் கிடைக்க ஆவண செய்யப்படும். சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிந்து விட்டது. விரைவில் திறப்பு விழா நடைபெறும். என்று பேசினார்.
அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் செங்கான், முன்னாள் கவுன்சிலர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.