கருங்குளம் பகுதியில் கொரானாவால் நாதஸ்வர கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து 1 மாதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்து வருகிறது . இந்த உத்தரவு மே 3 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள நாதஸ்வர கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் நாரயணக்கம்பர் கூறும்போது, ஒரு நாதஸ்வர குழுவில் இரண்டு நாதஸ்வர வித்வான்கள், இரண்டு ராஜமேளம், இரண்டு இரட்டை மேளம், ஒரு சால்ரா உள்பட குறைந்தது 7 கலைஞர்கள் பணியாற்றுவோம். கருங்குளம் ஒன்றியத்தில் செய்துங்கநல்லூர், அனவரதநல்லூர், விட்டிலாபுரம், வசவப்பபுரம், முத்தாலங்குறிச்சி, வல்லநாடு, மணக்கரை உள்பட பல பகுதியில் இந்த தொழில் செய்யும் தொழிலாளர்கள் வசித்துவருகிறோம். வருடந்தோறும் அம்மன் கோயில்களில் பூஜை செய்யும் தொழிலை செய்து விட்டு, வருடத்தில் ஏப்ரல் மே மாதங்களில்தான் கோயில் கொடை விழா உள்பட முக்கிய கச்சேரிக்கு செல்வோம். இந்த ஆண்டு கொரனா காரணமாக ஏப்ரல் மே ஆகிய மாதங்கள் ஊரடங்கு உத்தரவாகி விட்டது. மே 3 ந்தேதி உத்தரவை தளர்த்தினாலும் கூட மே மாதம் நடத்த வேண்டிய கோயில் கொடை விழா அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 300 க்கு மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். இவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


