கருங்குளம் அருகே பஸ் போக்குவரத்தே இல்லாத கிராமத்தினால் பொதுமக்கள் அவதியுற்று வருகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு.
கருங்குளம் ஒன்றியம் சேரகுளம் பஞ்சாயத்தில் உள்ள கிராமம் வெட்டிகுளம். இந்த கிராமத்தில் சுமார் 500 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு பேருந்து வசதி கிடையாது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சேரகுளத்திற்கு சென்று பஸ் ஏரி மருத்துவமனைக்கு மற்றும் வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இராமானுஜம்புதூர் அரசு உயர்நிலை பள்ளிக்கு 25 குழந்தைகள் தினமும் கல்வி பயில செல்கின்றனர். 2012யில் கிளாக்குளம் கிராமத்தில் சிறுமி புனிதாவுக்கு நடைபெற்ற அவல நிலைக்கு காரணம் பள்ளிக்கு செல்ல சரியான பஸ் போக்குவரத்து இல்லாததுதான். இதே நிலைதான் இவ்வூரிலும் உள்ளது.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த ராஜாசிங் கூறும் போது, எங்கள் கிராமத்தில் சுதந்திரமடைந்து சாலை வசதி இல்லாமல் இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது சேரகுளம் & பேய்குளம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் எங்கள் ஊர் உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லை. எங்கள் கிராம மக்கள் மருத்துவ வசதி உள்பட பல அடிப்படை வசதிக்கு சேரகுளம் அல்லது பேய்குளம் செல்லவேண்டும். ஆனால் மினிபஸ் வசதி கூட இல்லை. எனவே உடனே அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து தர வேண்டும் என்று கூறினார்.
சுதந்திரமடைந்த பிறகு சாலை வசதி பெற்ற இந்த கிராமத்தில் உடனே பேருந்து வசதியும் செய்து தரவேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.