
சாத்தான்குளம் அருகே அறிவான்மொழி காட்டு பகுதியில் கரடி தென்பட்டதையடுத்த வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. அங்குள்ள காட்டு பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் இருந்த போது கருப்பு நிற உருவம் வேகமாக சென்றுள்ளது. உடனே அவர் சென்று பார்த்தபோது கரடி போன்று இருந்ததால் திருச்செந்தூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை ரேஞ்சர் ரவீந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் வந்து அதன் தடங்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று காலையும் அப்பகுதியில் கரடி வந்ததாகவும், அப்பகுதி நாய்கள் அதனை விரட்டியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் வனத்துறை டிஎப்ஓ சம்பத், வனத்துறை ஏசிஎப் பாலசுப்பிரமணியன், ரேஞ்சர் ரவீந்திரன், வனவர் பொன்ராணி, வன பாதுகாவலர்கள் ரத்தினம், பரமசிவம், முத்துகுமார் , அருள்ராஜ் ஆகியோர் வந்து கரடியின் தடங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். கால் தடங்கள் வித்தியாசமாக காணப்பட்டதால் அப்பகுதியில் பதுங்கி உள்ளதா என சோதனை நடத்தினர்.
அப்பகுதியில் கடலை பயிரிட்டுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து நீர் வழி பாதை வழியாக கரடி இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும் இரவு அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கரடி தென்பட்டால் வலை வைத்து கரடியை பிடிக்க முடிவு செய்துள்ளனர். கரடியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.