திருச்செந்தூர் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், சுமார் 3.95 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த புதன்கிழமை, கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமையில் இணை ஆணையா் க. ராமு முன்னிலையில் நடைபெற்றது.
இந்தப் பணியில், உதவி ஆணையர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். கோயில் பணியாளர்கள் மற்றும் அயற்பணி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் மொத்த விவரங்கள் வருமாறு: இதில், ரூ. 3 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரத்து 510 பணம், 803 கிராம் தங்கம், 17,765 கிராம் வெள்ளி, 26,300 கிராம் பித்தளை, 7,860 கிராம் தகரம், 3,340 கிராம் செம்பு, 944 தாள்கள் வெளிநாட்டுப் பணம் இருந்தது.


