ஸ்ரீவைகுண்டம் தாலூகா, கலியாவூர் குளத்தின் கரையை உடைத்து காற்றாலை அமைப்பதை கண்டித்து ª பாதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கலியாவூர் பெரிய குளம் வானம் பார்த்த குளம். இவ்வூர் தாமிரபரணி ஆற்று கரையில் இருந்து கூட காட்டாற்று தண்ணீர் மூலமாக தான் இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து சேரும் அமைப்பில் உள்ளது. எனவே மழை பெய்யும் போது வரும் தண்ணீரை மட்டுமே இதில் தேக்கி வைத்து விவசாயிகள் பயன்படுத்துவார்கள். தற்போது போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் கருவேல மரங்களை வளர்த்து அதை வெட்டி கரிமூட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள். எப்போதாவது மழை பெய்யும் போது தண்ணீர் கலியாவூர் பெரிய குளத்தில் உடைத்து கொண்டு சென்று விடும். எனவே கரையை மேம் படுத்த வேண்டும். வரத்து கால்வாயை சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் தற்போது இங்கு காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தளவாட்ட பொருள்கள் கொண்டு செல்ல குளத்து கரையை உடைத்து அந்த வழியாக லாரியை பயன்படுத்தி வந்தனர்.
இது குறித்து கேள்வி பட்டவுடன் கலியாவூர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விடத்தினை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் போராட்ட காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின் அவர்களை கலைந்து செல்லும் படி அறிவுருத்தினார்.
இதுகுறித்து கலியாவூரை சேர்ந்த தங்கம்மாள் கூறும்போது, ஏற்கனவே வானம் பார்த்த பூமியாக இருந்த கலியாவூர் பெரிய குளம் எப்போதாவது மழை பெய்தால் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. தற்போது காற்றாலை அமைக்கபோகிறேன் என தற்போது கரைகளை உடைத்து வாகனங்களை உள்ளே கொண்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குளத்துக்கு கரையை சேதப்படுத்துக்கூடாது என நாங்கள் முற்றுகை நடத்துகிறோம். ஆனால் காவல் துறை எங்கள் கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் எங்களை திசை திருப்புகிறார்கள். எனவே எங்கள் பிரச்சனையை உணர்ந்து குளத்து கரையை உடைக்காமல் வாகனங்களை கொண்டு செல்ல அறிவுருத்த வேண்டும் என கூறினார்.
தீடிரென பெண்கள் இவ்விடத்தில் முற்றுகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.