![](https://www.muthalankurichikamarasu.com/wp-content/uploads/2019/06/tiruchendur-photos.jpg)
திருச்செந்தூர் போலீஸ் சப்டிவிசனுக்குட்பட்ட பகுதியில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என புதிய முயற்சி நாளை (1ம் தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் 13 பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணிந்து முதலில் வந்த 30 நபர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலங்களில் நடந்த டூவிலர் விபத்துக்களில் வாலிபர்கள் விபத்தில் சிக்கினார்கள். இதில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இந்த விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. இது போன்ற விபத்துக்களை குறைக்கும் முயற்சியாக திருச்செந்தூர் போலீஸ் சப் டிவிஷனில் போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய முயற்சி நாளை முதல் நடைமுறைப்படுத்தபட உள்ளது.
இந்த புதிய முயற்சி குறித்து போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நோட்டீஸ் அடித்தும், உள்ளூர் டி.வி.க்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் திருச்செந்தூர் சப் டிவிசனுக்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரன்பட்டணம், பரமன்குறிச்சி பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் நேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து முதலில் வந்த 30 வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நடந்த நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. பாரத் ஹெல்மெட் அணிந்து முதலில் வந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் இலவச பெட்ரோல் வழங்கினார். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தார். இதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பாரத் கூறுகையில், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற புதிய முயற்சி நாளை(1ம் தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய முயற்சி குறித்து கடந்த ஒரு வாரகாலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே மாதத்தில் ஒரு நாள் மகிழ்ச்சி நேரம் என அறிவித்து காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதலில் ஹெல்மட் அணிந்து வாடிக்கை யாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்றார்.