தட்டார்மடம் அருகே இரண்டு மகன்கள் தற்கொலையில் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரைச் சேர்ந்தவர் கோயில்மணி(60). இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு மூன்று ஆண் இரண்டு பெண் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் விஜய்க்கு திருமணமாகவில்லை. கோயில்மணி கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் மகன் விஜய் கோவையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயின் அண்ணன் ராஜா புதூரில் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். விஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த விஜய் கோவையிலிருந்து புதூருக்கு வந்து கடந்த 20ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.
ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவரது சகோதரர் ராஜா குடும்ப பிரச்சனையால் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் தம்பி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த விஷம் கலந்திருந்த மதுவை சாதாரணை மது என நினைத்து குடித்து விட்டார். சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா 20ம் தேதி இறந்தார். பாளை.ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் 22ம் தேதி இறந்தார்.
இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோயில்மணி கோவைக்கு வேலைக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் புதூருக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் சென்று அவரை மீட்டு வந்து உடன்குடி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு புத்தாண்டு அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். ஒரே வீட்டில் 10 நாட்களுக்குள் மூன்று பேர் இறந்தது அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.