தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. ஒரே மாவட்டத்தில் ஓட கூடிய நதி. பல கோடி லிட்டர் தண்ணீரை தினமும் நெல்லை , தூத்துக்குடி விருதுநகர் மாவட்டத்துக்கு தரக்கூடியது. தாகத்தினை போக்கும் நதிக்கு தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் விழா என கூறுகிறார்கள். அகத்திய பெருமான் இன்றுதான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கான கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே பூஜை எதுவும் நடத்த இயலவில்லை. ஆனாலும் சமூக இடைவெளி விட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்று தாமிரபரணி நல இயககத்தினர் உறுதி மொழி எடுத்துககொண்டனர்.
மணக்கரை போஸ்டர் மாஸ்டர் காளிமுத்து தலைமை வகித்தார். ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காத முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சச்சின் முத்துகுமார், முருகன், கேசவன், கொங்கராயகுறிச்சி போஸ்ட் மாஸ்டர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து காளிமுத்து கூறும் போது, தொடர்ந்து 21 வருடகாலமாக நாங்கள் வடமொழி நூலான தாமிரபரணி மகாத்மியம் கூறியபடி வைகாசிவிசாகம் அன்று தாமிரபரணிக்கு பிறந்த நாள் விழா நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு கொரேனா தொற்று காரணமாக சமூக இடைவெளி விட்டு நின்று உறுதி மொழி எடுத்துககொண்டோம். இதுவொரு விழிப்புணர்வு விழா. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்துக்கு தொடர்ந்து குடிதண்ணீர் தருவது தாமிரபரணி தான். ஆனால் இந்தநதி தற்போது சுரண்டப்பட்டு, சாக்கடை கலக்கப்பட்டு உயிர்காக்கும் நதி, உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்கு காரணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த பிறந்த நாள் விழாவை விழிப்புணர்வு விழாவாக கொண்டாடுகிறோம் என்றார்.


