தூத்துக்குடி மாவட்டம், மேல கூட்டுடன் காடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மந்திரம் என்ற மகராஜா (23). இவரது நண்பர் மேலகூட்டுடன்காட்டை சேர்ந்த சேர்ந்தையன் மகன் முத்துராஜசேகர் (19). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்கள். இருவரும் மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு ஒரு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மகராஜா பைக்கை ஓட்டி வந்தார். தெய்வச்செயல்புரம் அருகில் வரும்போது எதிர்பாராத விதமாக பைக் நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள திடீரென சென்டர் மீடியனில் மோதியது.
இதனால் பைக்கில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மகராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துராஜசேகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துராஜ சேகராவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.