செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் பைக்குகள் மோதி விபத்திக்குள்ளானதில் வருவாய் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தலையாரியாக வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென இறந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையில் இவரது மகன் நடராஜன் (வயது 20) என்பவருக்கு திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் விநியோக பிரிவில் சிறப்பு வருவாய் ஆய்வாளர் பணி கிடைத்தது.
இந்நிலையில் நேற்று அவர் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளை. அருகே செய்துங்கநல்லூர் கீழே தூதுகுழி பகுதியில் வந்தபோது எதிரே வந்த பைக் நடராஜன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.