அரசர்குளத்துக்கு தனி ரேசன் கடை அமைக்காவிடில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலூகாவுக்கு உள்பட்ட பஞ்சாயத்து வல்லகுளம். இந்த பஞ்சாயத்தில் அரசர்குளம் சுற்று பகுதியில் 250க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது ரேசன் பொருள் வாங்க 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லகுளம் கிராமத்துக்கு நடந்து வந்து செல்கின்றனர். இதுகுறித்து கடந்த 25 வருட காலமாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையில் வல்லகுளத்தில் இருந்து மணல்விளை மற்றும் அரியநாயகி புரத்துக்கு தனி ரேசன் கடை பிரித்து கொண்டு சென்று விட்டனர். ஆனால் அரசர்குளத்துக்கு தனி ரேசன்கடை அமைக்க வில்லை. பகுதிநேர ரேசன் கடை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மதுரை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மூன்று மாதத்துக்குள் அரசர்குளத்தில்ரேசன்கடைதிறக்க வேண்டும்என நீதியரசர்கள் உத்தரவிட்டனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
இது குறிதது அரசர்குளத்தினை சேர்ந்த பால்ராஜ் என்பவர் கூறும்போது, அரசர்குளம் மக்கள் பிரச்சனை இதுவரை தீர்க்கப்படுவதாக தெரியவில்லை. கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது பகுதிநேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுத்து அரசர்குளத்தில் வைத்து ஒரு நாள் பொருள் வழங்கினார்கள். ஆனால் மறு நாள் தேர்தல் அறிவித்து விட்டார்கள் என ரேசன் கடையை அடைத்துவிட்டனர். அதன்பிறகு எத்தனை முறையோ முயற்சி செய்தும் இங்கு பகுதி நேர ரேசன் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் 250 குடும்பங்களும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.
தேர்தலை புறக்கணித்து ஊர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த போவதாக ஊர்மக்கள் அறிவித்து உள்ளனர்.