ஸ்ரீவைகுண்டம், ஆறாம்பண்ணையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிவக்குமார், தலைமையாசிரியர் முத்துசிவன், வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இதில், வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயமுருகன், விவேக், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று, ஆறாம்பண்ணையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக்அப்துல்காதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் அப்துல்கனி, வி.ஏ.ஓ., கமல்ராஜ், பஞ்சாயத்து செயலாளர் அரிகரசுந்தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பஞ்சாயத்து அலுவலகம் முன்பிருந்து துவவங்கிய பேரணியானது கிராமத்திலுள்ள அனைத்து தெருக்களின் வழியாக சென்று மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை வந்து அடைந்தது. இதில், கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார், அங்கன்வாடி பணியாளர்கள் பாக்யராணி, அன்னாள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரணியில் சென்றவர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.