ஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், கோட்டாட்சியர்கள் தனப்பிரியா, விஜயா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) பாலசுப்பிரமணியன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயிகள் சிலர் மழையால் சேதமடைந்த மக்காச்சோளம் பயிருடன் கலெக்டரை முற்றுகையிட்டு இழப்பீடு வழங்க முறையிட்டனர். ஆவல்நத்தம் விவசாயி ரங்கசாமி, கலெக்டர் முன்தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆவல்நத்தத்தில் 2015-16ல் வாழை சாகுபடி செய்யாத நிலையில், சாகுபடி செய்ததாக 28 பேர் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். அந்த கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
விவசாயிகள் சிலர், வைப்பாற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணியில் ஆழ்வார்திருநகரியில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடம்பாகுளத்தை தூர்வார வேண்டும் என்றனர்.தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது,பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் 2017-18ல் பயிர் காப்பீடு செய்ததில் மொத்தம் ரூ.84.71 கோடி இழப்பீட்டுத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையாதவர்கள் இணைந்து காப்பீட்டு தொகையை செலுத்தி பயன்பெற வேண்டும்.
கடந்தாண்டு கன மழையால் பயிர், உளுந்து, வெங்காயம் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு கணக்கிடுவதற்கு வருவாய், வேளாண்மை, புள்ளியியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்திருநகரியில் ரூ.25.6 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் கடம்பாகுளத்தில் ரூ.50 லட்சத்தில் தூர்வாறும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து உப்பாற்று ஓடையின் கரையை ரூ.27.50 லட்சத்தில் பலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக தூர்வாரி பலப்படுத்திட ரூ.58.50 கோடி மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்தும், புகையான் தாக்குதல் மேலாண்மை குறித்தும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.