ஆடிபெருக்கை முன்னிட்டு கருங்குளம் தாமிரபரணி ஆற்றுக்கு மழை வேண்டி பூஜை செய்து வழிப்பட்டனர்.
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் பக்தபேரரவை சார்பில் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜை வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் அந்த பூஜை நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
தாமிரபரணி கரையில் சிவலிங்கம் வைத்து அதற்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின் பெண்கள் தாமிரபரணி நடுஆற்றில் சென்று பட்டுபுடவை, பூ, உள்பட பொருள்களை படையலாக படைத்து சுலவில் வைத்து ஆற்றில் விட்டனர். அதன் பின் நதிக்கு ஆராதனை செய்து பூ தூவி, கற்பூரம் காட்டி வழிப்பட்டனர்.
அதன் பின் சுமார் 200க்கு மேற்பட்ட பெண்கள் வரிசையாக நின்று தீபம் ஏற்றி தாமிரபரணியில் விட்டு வழிபட்டனர்.
அதன் பிறகு தாமிரபரணிக்கு “ஜே” என்று கோஷம் போட்ட படி கரையேறினர். கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கண்ணன் குணசேகர பட்டர் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் பக்தபேரரவை செய்திருந்தது.


