தூத்துக்குடியில் தெப்பக்குளம் பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வரும் தை மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம், நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வரும் தை மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர், வைகுண்டபதி பெருமாள் உள்ளிட்ட முக்கிய ஆலயங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள இத்தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு சீரமைப்புப் பணிகளின்போது எதிர்பாராத விதமாகத் தெப்பக்குளம் சிதைந்ததைத் தொடர்ந்து, பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் மீண்டும் உருவாக்கப்படும் என மேயர் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி டார்ச் விளக்கு வெளிச்சத்தில் நேரில் சென்று முழுமையாக ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர், “தெப்பக்குளத்தின் தென்புறம் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் இரண்டு மின்கம்பங்கள் மாநகராட்சி நடவடிக்கையால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு 365 நாட்களும் பொதுமக்கள் வந்து கண்டுகளிக்கும் வகையில், இயற்கையான தோற்றத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி, இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள், பொதுமக்கள் அமரும் இருக்கைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளுடன் தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் தை மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். ஆய்வின்போது போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


