திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக எஸ்பியிடம் பண்ணையார் சமுதாய நல சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் பண்ணையார் சமுதாயத்திற்குரிய உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நல சங்கம் சார்பில் மாநில செயலாளர் M. சேகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனு விவரம்: “திருச்செந்தூர் திருக்கோவிலில் நடக்கும் பல்வேறு திருவிழாக்களின் போது பண்ணையார் சமுதாயத்திற்கென பல உரிமைகள் உள்ளன.
குறிப்பாக சூரசம்ஹார விழாவின் போது வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்வது, ஆவணி மற்றும் மாசித் திருவிழாவின் போது திருவிழாவிற்கு முன்னர் கால் நடுதல் விழா நடைபெறுவது போன்ற நிகழ்வுகளில் எங்கள் சமுதாயம் கொடுக்கும் மணலை வைத்துதான் கால்நடுதல் விழா நடைபெறும். மேலும், கார்த்திகை தீபத்தின் போது சொக்கப்பனை தீபம் ஏற்றும் போது எங்கள் சமுதாயம் சார்பில் பனை மரம் நடப்படும். ஆவணி மற்றும் மாசித் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும் போது வடம் இழுக்கும் முதல் மரியாதை உண்டு.
சூரசம்ஹாரம் அன்று காலை எங்கள் சமுதாயத்தாரால் 4 இடங்களில் மணல் மேடு உண்டாக்கி அடையாளமாக வேப்ப மரத்து கிளைகள் வைக்கப்படும். இதற்கு ‘கோட்டை கட்டுதல்’ என்று பெயர். குறிப்பிட்ட இடங்களில்தான் சூரனின் ஒவ்வொரு தலைகளும் வெட்டப்படும். காலம் காலமாக எங்கள் சமுதாயத்திற்கென அடையாள பேட்ஜ்கள் கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை கோவில் நிர்வாகம் சார்பில் பேட்ஜ் கொடுக்கப்படவில்லை.
இரண்டாவதாக சிவன் கோயிலில் இருந்து சூரன் புறப்பட்டு கடற்கரை செல்லும் வரை ஒரு துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 30 காவலர்கள் எங்களை சுற்றி இரு புறமும் கயிறுடன் கடற்கரை வரை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள். கடந்த 15.11.2026 அன்று நடந்த சூரசம்ஹார விழாவின் போது மேற்கண்ட பாதுகாப்பு கொடுக்கப்படாத காரணத்தால், பக்தர்களும் எங்களுடன் ஊடுருவிய காரணத்தால் கடற்கரையில் மிகப் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு எங்கள் சமுதாயத்தினர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. உயிர்சேதம் மட்டும் ஏற்படவில்லை.
இதே நிலை நீடித்தால், வருங்காலங்களில் உயிர்சேதமும் ஏற்பட மிகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மேற்கண்ட அசம்பாவிதம் இனி வருங்காலங்களில் நடைபெறாதவாறு வழக்கம் போல துணை கண்காணிப்பாளர் தலைமையில் போதிய காவலர்களுடன் சூரனுடன் செல்லும் எங்கள் சமுதாயத்தினருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


