திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்தால் உருவாகியுள்ள மணல் திட்டுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் குவிந்துள்ள மணல் திட்டுகளை அகற்றி, தூண்டில் பாலத்தை மறுசீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. கடலரிப்பைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுப் பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதி வழியாகவே மீனவர்கள் படகுகளைக் கடலுக்குக் கொண்டு செல்வதும் கரை திரும்புவதும் வழக்கம்.
இந்நிலையில், அப்பாதையில் கடல் சீற்றத்தால் அடித்துவரப்பட்ட மணல் பெருமளவில் குவிந்து பெரிய திட்டுகளாக மாறியுள்ளதால், மீனவர்கள் தங்களது படகுகளைக் கடலுக்குக் கொண்டு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்கரைப் பகுதியில் குவிந்துள்ள மணல் திட்டுகளை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, துறைமுக கமிட்டி தலைவர் சுபா தல்மேதா, பரதவர் சமுதாயத் தலைவர் வினோஜ், வீரபாண்டியன்பட்டினம் பாஸ்டின் மற்றும் மீனவ மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மணல் திட்டுகளை உடனடியாக அகற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரோ சப்னம், இணை இயக்குநர் இளம்வழுதி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பிரைட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


