தூத்துக்குடி மாவட்டத்தில் திறக்கப்படாமல் உள்ள 13 அரசு கட்டிடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.
விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரப் பகுதிகளில் மொத்தம் ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குடியிருப்பு மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடங்களைச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.74.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதன்ராஜா, தூத்துக்குடி மாவட்டத்தில் திறக்கப்படாமல் உள்ள அரசு கட்டிடங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மொத்தம் 13 அரசு கட்டிடங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் உச்சநேர மின்கட்டணம் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மின்சாரத் துறையிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்சாரத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்பட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சுமார் ரூ.1,500 கோடி மானியத் தொகை வழங்கப்படாமல் இருந்த நிலையில், முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.600 கோடி மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதில், இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை அடுத்தடுத்த காலாண்டுகளில் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தென் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாவட்டத் தொழில் மையங்கள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தொழில் முனைவோருக்கு விளக்கப்படுவதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட இணைச்செயலாளர் எபனேசர், வெம்பூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஆசிரியப் பெருமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


