திருக்கல்யாண வைபவத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மேடையில் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் வெங்கடேச பெருமாள் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டனர். தொடர்ந்து கணபதி பூஜை, கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை ஆகிய வழிபாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்குக் காப்பு கட்டுதல், திருமாங்கல்யம் அணிவித்தல் உள்ளிட்ட திருக்கல்யாணச் சடங்குகள் வேத மந்திரங்கள் முழங்கச் சிறப்பாக நடைபெற்றன. இப் பூஜைகளை பூமதேவி குருக்கள், செல்வ சுப்பிரமணியன், சங்கர் ஓதுவார், சுப்பிரமணிய சாமி மற்றும் ஆறுமுக சாமி ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இவ்விழாவில் கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றப் பக்தர்கள் அனைவருக்கும் மங்களப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.