கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தவறிவிட்டுச் சென்ற 10 பவுன் தங்க நகைகள், 2 லேப்டாப்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்து, உரியவரிடம் ரயில்வே போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
நாகர்கோவிலில் இருந்து கோவில்பட்டி வரை ‘அந்தோதியா எக்ஸ்பிரஸ்’ ரயிலில் மணிகண்டன் என்பவர் தனது மனைவி சுஜி மற்றும் குழந்தையுடன் பயணம் செய்தார். பின்னர் கோவில்பட்டியிலிருந்து பெங்களூரு செல்வதற்காக, நடைமேடை எண் 2-இல் நின்ற ‘மைசூர் விரைவு ரயிலில்’ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது, அவசரத்தில் அவர்கள் கொண்டு வந்த ஒரு கருப்பு நிற தோள்பையை கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையிலேயே விட்டுச் சென்றனர். நடைமேடை பணியில் இருந்த ரயில்வே உதவி சார்பு ஆய்வாளர் மாடசாமி உரிமை கோரப்படாமல் இருந்த அந்தப் பையைக் கைப்பற்றி ஆய்வு செய்தார். அதிலிருந்த ஆவணங்கள் மூலம் உரியவரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த மணிகண்டன் உடனடியாகச் சாத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி, மீண்டும் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, பையிலிருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகள், 2 லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்டார்.
நேர்மையாகவும் துரிதமாகவும் செயல்பட்டுப் பொருட்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே தனிப்படை மற்றும் உதவி ஆய்வாளர் மாடசாமிக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


