மாணவப் பருவம் கனவுகளும், தடுமாற்றங்களும் நிறைந்த பருவம். எதையும் அறிந்துகொள்ள வேண்டும்; புதிய அனுபவங்களைப் பெற வேண்டும்; தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் , அனுபவித்து பார்த்துவிட வேண்டும்…என்பன போன்ற துடிப்புடன் எப்போதும் இயங்கிக் கொண்டிருத்தல் இப்பருவத்தினரின் இயல்புகள்.
ஆராய்வூக்கம் (Curiosity)
***********
ஆராய்வூக்கம் (Curiosity) மனித வளர்ச்சிக்குத் தேவையான மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று.
ஆராய்வூக்கம் மிகுந்த குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், எதையும் “ஏன்?”, “எதற்கு?”, “எப்படி?” என்று பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களது இந்த அறிவுத் தேடல் ஓயாமல் அவர்களைச் சிந்திக்கவும், கற்கவும், புதிதாக முயற்சிக்கவும் தூண்டுகிறது.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் கூட, புதியவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்ற மனிதனின் ஆராய்வூக்கத்திலிருந்தே பெருமளவில் உருவாகியவை.
புதியனவற்றை அறிந்துகொள்ளவும், அனுபவித்துப் பார்க்கவும் வேண்டும் என்ற வேட்கை அவர்களது இயல்பான வெளிப்பாடாகும்.
ஆராய்வூக்கம் — ஆற்றலா?
******”**** ஆபத்தா?
**†***
எனது ஆசிரியப் பயணத்தின் அனுபவத்தில், மாணவர்களின் மன உலகத்தை மிக அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
போதைப் பழக்கத்தின் விளிம்பில் சென்ற சில மாணவர்கள், திட்டமிட்டு அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அல்லவே அல்ல.
அவர்களின் பின்னணியில் ஆராய்வூக்கம், தவறான நட்பு, அன்பிற்கான ஏக்கம், மன அழுத்தம், தனிமை அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமை போன்ற பல காரணிகள் இருக்கின்றன.
இயல்பான அவர்களது ஆராய்வூக்கத்திற்குச் சரியான வழிகாட்டுதலும் உணர்வுப்பூர்வமான குடும்பச் சூழலும் இல்லாதபோது, அது தவறான நண்பர்கள், எதிர்மறையான சமூகத் தாக்கங்கள், தவறான முன்மாதிரிகள் அல்லது போதைப்பொருட்கள் போன்ற ஆபத்தான அனுபவங்களை நோக்கித் திரும்பும் அபாயம் ஏற்படுகிறது.
உளவியலாளர் ஜீன் பியாஜே (Jean Piaget), குழந்தைகளின் அறிவு வளர்ச்சி என்பது அவர்கள் உலகை ஆராய்ந்து, அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்வதோடு தொடர்புடையது என்பதை வலியுறுத்துகிறார்.
அதேபோல், இளம்பருவ வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் லாரன்ஸ் ஸ்டெயின்பெர்க் (Laurence Steinberg), இளம்பருவத்தினர் புதிய அனுபவங்களை நாடுவதிலும், ஆபத்தைச் சோதித்துப் பார்ப்பதிலும் பெரியவர்களைவிட அதிக முனைப்பைக் காட்டக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
குழந்தைகளின் இந்த இயல்பான ஆராய்வூக்கம்( Curiosity) தவறான சூழல்களுடன் இணையும்போது, “ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால் என்ன?” என்ற எண்ணம் சிலரிடம் ஏற்படுகிறது.அந்த அனுபவம் தொடர்ந்து நிகழும் வாய்ப்பைப் பெறும் போது அது அவர்களது பழக்கங்களுள் ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே, மாணவர்களின் ஆராய்வூக்கத்தை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.
போதைப் பழக்கத்தின்
********* தொடக்கம்
******
மாணவப் பருவம் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான காலகட்டமாகும். எதிர்கால வாழ்க்கையின் அடித்தளத்தை அமைக்கும் இந்தப் பருவத்தில், ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான மனிதராகப் புரிந்துகொள்ளப்பட்டு, சரியான வழிகாட்டுதலுடன் வளர்க்கப்பட வேண்டும்.
போதைப் பழக்கத்தில் சிக்கிய ஒரு மாணவனை வெறுமனே “பெரும் தவறு செய்தவனாக ஒதுக்கி வைத்தல் பெருங்குற்றம்” அவன் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தான்?” என்ற ஆரோக்கியமான பார்வையும் வழிநடத்தலும் அவசியமானது. .
முதல் பாதுகாப்பு வளையம்
************
குடும்பம்தான் குழந்தைகளின் வாழ்க்கைக்கான முதல் அடித்தளம். அங்குதான் அவர்களின் மனப்பான்மை, பண்புகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கைக்கான நோக்கம் உருவாகத் தொடங்குகின்றன.
அன்பும், அரவணைப்பும்,வழிகாட்டலும் நிறைந்த குடும்பச் சூழல் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உளவியல் அடித்தளத்தை வழங்குகிறது.
அது போதைப் பழக்கத்தை நோக்கிச் செல்லும் பல ஆபத்தான விசயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் முக்கியமான காரணியாக அமைகிறது.
குழந்தை வளர்ப்பு முறைகள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்ட உளவியலாளர் டயானா பௌம்ரிண்ட் (Diana Baumrind), அன்பும் அரவணைப்பும் மட்டுமல்லாமல், தெளிவான எல்லைகளும் பொறுப்புணர்வும் கொண்ட பெற்றோர் வளர்ப்பு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்தது என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புடன் கூடிய எல்லைகள், உரிமையுடன் கூடிய பொறுப்பு, சுதந்திரத்துடன் கூடிய வழிகாட்டுதல் இவையே ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பின் அடிப்படைகள்.
வாழ்வின் தொடக்கத்தில் குழந்தைகளின் அன்புத் தேவையை நிறைவு செய்வதில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பொருளாதாரத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதால் பெற்றோர் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்று கருத முடியாது. பெரும்பாலான குழந்தைகள் அதை பெற்றோரின் இயல்பான பொறுப்பாகவே எண்ணுகின்றனர்.
தாங்கள் படும் கஷ்டங்களை குழந்தைகள் தானாகவே புரிந்துகொள்வார்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்வது, காலங்காலமாகத் தொடரும் பெற்றோரின் ஒரு தவறான மனப்போக்காகும்.
பெற்றோரின் விழிப்புணர்வு
*************
பெற்றோர் குழந்தைகளுடன் மனம் திறந்து பேச வேண்டும். அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், தேவைகள், அச்சங்கள் ஆகியவற்றை அறிந்து, அதற்கேற்ப வழிநடத்த வேண்டும். குழந்தைகளுடன் போதிய நேரத்தைச் செலவிடும் பெற்றோரால் மட்டுமே அவர்களின் மனத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
குழந்தைகள் யாருடன் நட்புறவு கொண்டுள்ளனர் என்பதையும் கவனிப்பது மிகவும் அவசியம். பொதுவாக, தங்களுடைய மன இயல்புகளுக்கும் ஆர்வங்களுக்கும் ஒத்தவர்களுடன்தான் அவர்கள் நட்பு கொள்ள விரும்புவார்கள்.
“என் பிள்ளை நல்லவன்தான்; தவறான நண்பர்களால்தான் கெட்டுப்போகிறான்” என்ற பெற்றோரின் குற்றச்சாட்டுகள் பள்ளிகளில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது.
ஆனால், ஒரு குழந்தையின் நண்பர்கள் அவனை எவ்வாறு பாதிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதோடு, அந்த நட்பின் தாக்கத்திற்கு அவன் ஏன் ஆளானான் என்பதையும் ஆராய வேண்டும்.
நல்ல குடும்ப உறவும், பெற்றோருடனான நெருக்கமான உரையாடலும் இருந்தால்,இத்தகைய தவறான நட்பின் தாக்கத்தைப் பெருமளவு குறைக்க முடியும்.
மாணவர்கள் இத்தகைய தீய பழக்கங்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் அறியவரும்போது, சில பெற்றோர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். தங்கள் குழந்தைகளால் இதைச் செய்ய முடியாது என்ற நம்பிக்கையும், அவர்கள் மீதான அன்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால், இத்தகைய நேரங்களில் பெற்றோர் நடுநிலையான மனநிலையுடன் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற மாணவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, தங்கள் குழந்தையை அந்தச் சூழலிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும். ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மன அழுத்தமும் தனிமையும்
************
பள்ளியில் நாள் முழுவதும் நேரத்தைச் செலவிடும் குழந்தைகள், வீட்டிற்கு வந்த பிறகு ஓய்வையும் அன்பான உரையாடலையும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனேயே மீண்டும் தனிப்பயிற்சி (Tuition) மையங்களுக்கு அனுப்பப்படுவது, அவர்களது விளையாட்டு ஆர்வத்தை முடக்குவது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு ஓய்வுக்கும் உணர்வுகளைப் பகிர்வதற்குமான நேரத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது.
தொடர்ச்சியான கல்வி அழுத்தமும், பெற்றோருடன் உரையாடுவதற்கான வாய்ப்பின்மையும் மாணவப்பருவத்தினரிடம் மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது.
குழந்தைகள் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை கவனமாகக் கேட்பது மிக முக்கியம். அவர்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உடனடியாக அறிவுரை வழங்குவதற்குப் பதிலாக, சில நேரங்களில் அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்பதே மிகப் பெரிய ஆதரவாக உணர்கின்றனர்.
நண்பர்களின் தவறான அழைப்புகளையும் ஆலோசனைகளையும் எளிதில் ஏற்காமல், அவற்றைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும் மனநிலையும் உருவாகும். இச்சூழல் அவர்களைத் தன்னை மறந்திருக்க வைக்கும் போதைப் பொருட்கள் அண்டையில் நெருங்க விடாதிருக்கும்
ஆசிரியர் ,பெற்றோர் இணைப்பு
*************
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோரும் ஆசிரியரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டிய முக்கியமான தூண்கள்.
ஒரு மாணவனிடம் திடீரென ஏற்படும் நடத்தை மாற்றம், படிப்பில் ஆர்வம் குறைதல், தனிமைப்படுதல், வழக்கத்திற்கு மாறான நண்பர் வட்டம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவற்றின் பின்னணியைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதே நேரத்தில், மாணவனை அவமானப்படுத்துவதோ, பொதுவெளியில் குற்றவாளியாகக் காட்டுவதோ தீர்வாகாது. அவனுடைய சுயமரியாதையைக் காப்பாற்றியபடியே உதவிக்கான பாதையைத் திறக்க வேண்டும்.
சரியான திசையைக் கண்டடையும் ஆராய்வூக்கம் சாதனையாளர்களை உருவாக்கும். ஆனால் தவறான திசைக்குத் திரும்பும் ஆராய்வூக்கம் வாழ்க்கையையே சிதைத்துவிடும்.
எனவே, மாணவர்களின் ஆராய்வூக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு நல்வழி காட்டுவதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் மனித வளத்தை முடக்கி சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பழக்கத்திலிருந்து நமது குழந்தைகளை விடுவிக்கவும் தடுக்கவும் முடியும்.
_ முனைவர் த.ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர், ஆசிரியர்
திருநெல்வேலி.


