தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வங்கியின் செயல் இயக்குநர் வின்சென்ட் மேனசேச்சேரி தேவஸ்ஸி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். வங்கியின் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் விழாவில் கலந்துகொண்ட ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய நிர்வாக இயக்குநர் வின்சென்ட் மேனசேச்சேரி தேவஸ்ஸி, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார். சுதந்திரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை ஆகிய உயரிய மதிப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் செயல் துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உதவிப் பொது மேலாளர்கள், உதவித் துணைத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவில் தலைமை இணக்க அதிகாரி ஜெ. சாந்தரேஷ் குமார் நன்றி உரை ஆற்றினார்.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 105 ஆண்டுகள் பழமைமிக்க வரலாற்றுச் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 628 கிளைகள், 13 மண்டல அலுவலகங்களுடன் 53 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வருகிறது.


