விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி கிராமத்தில், மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை மற்றும் ஆடி கொடை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி கிராமத்தில், மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழா மற்றும் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் 3-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
லெக்கம்பட்டி யாதவ சமுதாய மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட விழா கமிட்டியால் நடத்தப்பட்ட இப்போட்டியில், ‘சின்னமாடு’ மற்றும் ‘பூஞ்சிட்டு’ என இரண்டு பிரிவுகளாகப் பந்தயம் நடத்தப்பட்டது. திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 28 ஜோடி மாடுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.
சின்னமாடு போட்டிக்குப் போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் போட்டிக்குப் போக வர 5 மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மாட்டு வண்டிப் பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் மதுரை அதிமுக அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் துணைச்செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளைச் சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியின் சார்பில் ரொக்கப் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போட்டியைக் காணச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர்.


