தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, ஜல துர்க்கை அம்மனுக்கு 5,000-க்கும் மேற்பட்ட வளையல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகைக்கு 5,004 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
காலை 9:00 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழாவிற்கான சிறப்புப் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகைக்கு 21 வகையான சிறப்பு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, 5,004 வளையல்கள் மற்றும் பல்வேறு வண்ண நறுமண மலர்களால் அம்பிகைக்குப் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டுத் தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, நெய் தீபங்கள் மற்றும் எலுமிச்சை தீபங்கள் ஏற்றி அம்மனைத் தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டிற்கு வந்திருந்த அனைத்துப் பெண் பக்தர்களுக்கும் வளையல்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
இச்சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் பிரதான பட்டர் செல்வம், ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகை டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் சிறப்பாகச் செய்திருந்தனர்.


