மாவீரன் அழகுமுத்துக்கோன் 316-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறிய 255 பேர் மீது மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின்படி தூத்துக்குடி மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இக் கண்காணிப்புப் பணியின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற 255 வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சாலைகளில் ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


