தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டித்தும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்த 2026 -2027 ஆம் ஆண்டிற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதிய இழப்புத் தொகையினை இடைத்தரகர்களின் தலையீடின்றி நேரடியாக அவர்களின் வங்கிச் கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்.
தொழிலாளர் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டுப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், ஒப்பந்த நிறுவனம் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட உடன்படிக்கையின்படி, 30.01.2026 முதல் பொன்ராஜ் என்பவருக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும்.
தமிழக அரசு தூய்மைப் பணிகளில் தனியார்மயமாக்கல் கொள்கையை ரத்து செய்துள்ள அரசாணையைத் தொழிற்சங்கம் வரவேற்றுள்ளது. அதே வேளையில், தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர்லாண்டு) நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திரளாக முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


