தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கான முன்னுரிமைத் திட்டங்களை அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகச் சங்க இணையதளச் சேவையினைத் துவக்கி வைத்தனர். சமூகப் பொறுப்புணர்வு நிதியின் (CSR) மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதே இத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
மாவட்ட முன்னேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, NDSO நிறுவனம், APRIL நிறுவனம், NLC Tamil Nadu Power Ltd ஆகிய நிறுவனங்களுடன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடன்படிக்கைப் பரிமாற்றங்களைச் செய்துகொண்டது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் NLC Tamil Nadu Power Ltd நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து ரூ.13.25 லட்சம் மதிப்பீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகள் தூத்துக்குடி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதிக்கு வழங்கப்பட்டன. அமைச்சர்கள் இப் பொருட்களை விடுதி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இவ் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் சொர்ணலதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


