மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் செய்து வரும் MSME சான்று பெற்றுள்ள வியாபாரிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதிய தொழில் முனைவோரை குறிப்பாக இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்குடன் அரசின் திட்டம் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு தொழில் முனைவோருக்கு சிறப்பு கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (PMFME) உணவு சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. செக்கு எண்ணெய், மாவு வகைகள், மசாலா வகைகள், பால் பொருட்கள் மற்றும் உணவு சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை www.pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் தமிழ்நாடு பெண்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் (TWEES) உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10.00 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அரசு மானியமாக 25% வரை அல்லது அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை வழங்கப்படும். இக்கடன்களுக்கு msmeonline.tn.gov.in/twees/dashboard.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கலைஞர் கைவினைஞர் திட்டத்தின் கீழ் (KKT) 35 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5 வருடம் அனுபவம் உள்ள கைவினைஞர்கள் கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய கடன்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு கடன் தொகையில் 25% மானியம் அல்லது அதிகபட்சமாக 50000/- வரை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை www.msmsonline.ingov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மேலும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் செய்து வரும் MSME சான்று பெற்றுள்ள வியாபாரிகள் குறிப்பாக பலசரக்கு கடை, டெய்லரிங் தொழில், பூக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் மற்றும் உற்பத்தி சேவை தொழில் செய்து வரும் நபர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் நேரிலும் விண்ணப்பம் பெற்று இக்கடன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


