கட்டாலங்குளத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவிற்கு செல்பவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 316-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்துத் தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, குருபூஜை விழாவிற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வீலிங் செய்தல், பந்தய வேகத்தில் ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சாகசச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பிற கடுமையான குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
எனவே, குருபூஜை விழாவிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீலிங், ரேசிங் போன்ற ஆபத்தான செயல்களை முற்றிலும் தவிர்க்குமாறும், காவல்துறையினரின் வழிகாட்டுதல்களையும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறுபவர்கள் மீது சட்டப்படி சமரசமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.


