தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக லாரியில் ஏற்றி வரப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் சிகரெட் மூடைகளைக் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் பேச்சிமுத்துவின் ஆலோசனைப்படி, உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் இன்று (15.06.2026) அதிகாலை இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 03.45 மணி அளவில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்றை போலீசார் மடக்கிச் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், லாரியில் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காக மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியிலிருந்து தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டை பீடி இலைகள் மற்றும் 6 பண்டல்களில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 1,20,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் (ஒரு பண்டலுக்கு 20,000 சிகரெட்டுகள் வீதம்) பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடத்தல் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் ஆகும்.
இதனைத் தொடர்ந்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரான மாரிகுமார் (36) என்பவரைக் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட டாரஸ் லாரி மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் அனைத்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காகத் தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.


