தூத்துக்குடி என்.டி.பி.எல். நிறுவனத்தின் பின்புற நுழைவு வாயில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போதுள்ள மோசமான சாலை, மழைக்காலங்களில் மேலும் ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதால், தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்பாதையை நிர்வாகம் நிரந்தரமாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
என்.டி.பி.எல். முன்பக்க நுழைவு வாயில் போன்று, பின்புற நுழைவு வாயில் பகுதியிலும் நல்ல தரமான சாலையை அமைத்துக் கொடுப்பது நிர்வாகத்தின் கடமையாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து TNEB / GDCLA யூனியனின் நிறுவனரும் மாநில பொதுச் செயலாளருமான சமூக ஆர்வலர் ச. பாலா (எ) பாலசந்தர் விடுத்துள்ள அறிக்கையில், “இப்பாதையைத் துறைமுக நிர்வாகம்தான் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால், துறைமுகத் தலைவருக்கும் கோரிக்கை கடிதம் வழங்கப்படும். தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் இந்தச் சாலையை அமைத்துத் தர வேண்டும். இக்கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், இப்பிரச்சினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


