தூத்துக்குடி அண்ணா சிலை பின்புறம் டீக்கடை முன்பாகக் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலையின் பின்புறம் தனியார் டீக்கடை இயங்கி வருகிறது. இந்தச் சாலை மற்றும் வணிக வளாகப் பகுதிக்குத் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், இந்த டீக்கடையிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த டீக்கடையின் முன்பாக மாநகராட்சியின் கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், வடிய வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. தற்போது வெயில் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக, தேங்கியுள்ள இந்தக் கழிவுநீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட அசுத்த நீரால் பரவும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே சாக்கடை நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாமல் டீக்கடை முன்பு தேங்கியிருப்பது பெரும் கவலையளிக்கிறது. உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டியது மாநகராட்சியின் கடமையாகும்.
எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாயைச் சீரமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நோய் பரவாமல் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.


