தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 2026-2028-ஆம் ஆண்டுக்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜி. விஜய சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறு சட்டத்தின் கீழ், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம், சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் உப்பள உரிமையாளர்கள் ஒரு தரப்பாகவும், 7 உப்பு தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றொரு தரப்பாகவும் இணைந்து வியாழக்கிழமை இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தின.
பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தினசரி ஊதியம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
உப்பு வாருதல் பணி: நாள் ஒன்றுக்கு ரூ. 710 ஊதியமாக வழங்கப்படும்.
இதர பணிகள்: உப்பு வாருதல் அல்லாத பிற உப்பளப் பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 700 ஊதியமாக வழங்கப்படும்.
இந்த புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 30.04.2026 முதல் 29.04.2028 வரை இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இந்தத் தினசரி ஊதியத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி, அகவிலைப்படி மற்றும் வார விடுமுறைக்கான சம்பளம் ஆகியவை உள்ளடங்கும். வார விடுமுறைக்கு எனத் தனியே சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். தூத்துக்குடியின் பொருளாதாரத் தூணாக விளங்கும் உப்புத் தொழிலில், சுமூகமான முறையில் கூலி உயர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பது தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


