சர்வதேசச் சந்தையில் நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் பொதுமக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வந்தது. குறிப்பாக, கடந்த காலங்களில் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக, மத்திய அரசே தனது கலால் வரியைக் (Excise Duty) குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.
- நவம்பர் 2021: பெட்ரோலுக்கு ₹5, டீசலுக்கு ₹10 குறைப்பு.
- மே 2022: பெட்ரோலுக்கு ₹8, டீசலுக்கு ₹6 குறைப்பு.
இந்த இரண்டு கட்ட வரிக்குறைப்புகளால் மத்திய அரசுக்கு சுமார் ₹2.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், மக்கள் நலனை முன்னிறுத்தியே பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதனைச் செய்தது.”
தற்போதைய உயர்விற்கான காரணங்கள்: தற்போது மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதோடு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் இறக்குமதிச் செலவை உயர்த்தியுள்ளது.
வாங்கிய விலையை விடக் குறைவான விலைக்குத் தொடர்ந்து விற்பனை செய்வது எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.
சாலை வசதிகள், விவசாய நலத்திட்டங்கள், மக்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் அரசுக்கு நிலையான வருவாய் அவசியமாகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த அவசியமான நடவடிக்கையை, பொதுமக்கள் அரசியல் நோக்கில் பார்க்காமல் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


