Passenger train in the Countryside near Pune India.
கோவில்பட்டி அருகே வீசிய பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழையினால், ரயில்வே மின்பாதை கம்பி மீது கடவுப்பாதை கேட் சரிந்து விழுந்தது. இதன் காரணமாகத் தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சி நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில், கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலை 6.05 மணியளவில் இந்த ரயில் கடம்பூர் – வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தடைந்தது. அந்தச் சமயத்தில் மலைப்பட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில் எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் இரும்பு கேட், பலத்த காற்றால் சரிந்து மின்பாதை கம்பி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரயில் மேற்கொண்டு நகர முடியாமல் வாஞ்சி மணியாச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டியில் இருந்து ரயில்வே மின்பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மின்பாதை கம்பி மீது விழுந்த கேட்டை அகற்றி, சேதமடைந்த மின் இணைப்புகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மின்பாதை சரி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரவு 7.40 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்தத் தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.


