சாத்தான்குளம் நகரில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் பொருட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணியை வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கடைவீதி, நாசரேத் சாலை மற்றும் இட்டமொழி சாலை போன்ற முக்கியப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதால், சாலை குறுகலாகிப் போக்குவரத்து நெரிசல் அன்றாடப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பா.ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த அளவீட்டுப் பணியை நேற்று (மே 14) தொடங்கியுள்ளனர்.
இப்பணியில் நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளர் சிவ சண்முகநாதன், சாலை ஆய்வாளர் முருகன் மற்றும் சாலைப் பணியாளர்கள், வருவாய் மற்றும் நில அளவைத் துறை சர்வேயர் தேவிகா, கிராம நிர்வாக அலுவலர் மதுமதி மற்றும் நில அளவையர்கள் குழுவினர் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம், இட்டமொழி சாலை மற்றும் நாசரேத் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் துல்லியமாக அளவீடு செய்தனர்.
அளவீட்டுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் சாத்தான்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைகள் விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


