கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். விரைவில் நீர்மனிதரின் அறிக்கை, தாமிரபரணியைக் காப்பாற்றத் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை வெளியிடுகிறேன்.
தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக்கோரிய வழக்கு: நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களைப் பாதுகாக்கக் கோரியும் கடந்த 2018-ஆம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024 அன்று தீர்ப்பு வழங்கினார்கள். உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை இந்து சமய அறநிலையத்துறை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், இந்த உத்தரவினை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த 10.11.2024 அன்று நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரில் வந்து, சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்தும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 02.01.2025 அன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மேலும் ஓர் ஆணையைப் பிறப்பித்தனர். அதன்படி, இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆற்றில் கலக்கும் சாக்கடையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை; நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை இல்லை.
எனவே, தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றை ஈடுபடுத்தினோம். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை இந்தப் பணிக்கு ஆணையராக நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து, திட்டங்கள் செயல்படத் தேவையான மதிப்பீட்டைச் சமர்ப்பிப்பார் என உத்தரவு பிறப்பித்தனர். ராஜேந்திர சிங்கை நீதிமன்றம் நியமித்திருப்பது ஒரு சிறப்புதான்.
ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பணிகள் திருப்திகரமாக இல்லை என்றும், இது தொடர்பாக எவ்வித உறுதியான திட்டமும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாநகராட்சி ஆணையர், அம்பை நகராட்சி ஆணையர், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் உட்பட 12 அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி என்னுடைய தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலையை விரிவாக ஆய்வு செய்து, பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்ய, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
முக்கிய அம்சங்கள்:
- ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும், ஆறுகளையும் மீட்டெடுத்த ராஜேந்திர சிங்கின் அனுபவம், தாமிரபரணியைத் தூய்மைப்படுத்த உதவும் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- இப்பணிக்குத் திண்டுக்கல்லில் சிறப்பாகக் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியைப் பெறவும் ராஜேந்திர சிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜேந்திர சிங் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், தாமிரபரணி ஆற்றைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் இன்றைய தினம் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். முதற்கட்டமாகத் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் ஒரே இடத்தில் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கழிவுநீரால் பாதிக்கப்படும் பகுதிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர், திருநெல்வேலி நகரத்திற்குள் தாமிரபரணி பாய்ந்து ஓடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாகத் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நெல்லை நகரப் பகுதிகளான சிந்துபூந்துறை, ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து இரண்டு தினங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார்.
அதைத் தொடர்ந்து தாமிரபரணியைப் பாதுகாப்பது குறித்து உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, முத்தாலங்குறிச்சி காமராசு, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, ராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணகுமார், சங்கரநாராயணன், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.
இந்தியாவின் நீர்வள மனிதர் எனப் போற்றப்படுபவர் ராஜேந்திர சிங். அவர் நமது தாமிரபரணி வழக்கில் நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோரால் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாமிரபரணிக்குச் சுற்றுப்பயணம் வருகிறார் என்றவுடன் அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். நண்பர் முனைவர் கந்தசுப்பு அவரைப் பற்றிச் செய்தி சேகரித்துத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதை முதலில் அசைபோடுவோம்.
இந்தியாவின் தண்ணீர் மனிதர் (Waterman of India) என்று அழைக்கப்படுபவர் ராஜேந்திர சிங் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்; நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் தனது மகத்தான பணிக்காக அறியப்படுபவர். குறிப்பாக, மழைநீர் சேமிப்பு முறைகளைப் பயன்படுத்திப் பல ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுத்துள்ளார். மேலும் சமூகத்தை ஒன்றிணைத்து, நீர் மேலாண்மையில் பெண்களை முன்னிறுத்தி வெற்றி கண்டுள்ளார்.
முக்கியப் பங்களிப்புகள்:
- ஆறுகளை மீட்டெடுத்தல்: 10,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஐந்து ஆறுகளையும் புத்துயிர் பெறச் செய்துள்ளார்.
- பாரம்பரிய முறைகள்: ‘ஜோஹத்’ போன்ற பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, வறண்ட கிராமங்களில் நீரைக் கொண்டு வந்துள்ளார்.
- சமூக இயக்கம்: ‘தருண் பாரத் சங்’ (Tarun Bharat Sangh) என்ற தனது தொண்டு நிறுவனத்தின் மூலம், மக்களை ஒன்றிணைத்து நீர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
- விருதுகள்: ரமோன் மகசேசே விருது (2001) மற்றும் ஸ்டாக்ஹோம் நீர் விருது (2015) உட்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில், தாமிரபரணி நதியைப் பாதுகாக்க இவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, நீர்வளங்களைப் பாதுகாக்க நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இவரைப் பற்றி மேலும் தகவல் உண்டா என நான் தேடியபோது, பல தகவல்கள் கிடைத்தன. தினமணி இதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். அந்தக்கட்டுரை கீழ்க்கண்டவாறு சொல்கிறது:
வற்றிய அல்லது நீர்வரத்துக் குறைந்த ஆறுகளைப் புத்துயிர் பெறச் செய்வதும், கிணற்று நீர் ஊற்றுகளை வீரியம் கொள்ளச் செய்வதும், அதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து எண்ணற்ற கிராமங்களை உயிர்ப்பிப்பதும் எளிதான செயல் அல்ல. தண்ணீர் இல்லை என்றால் மனித உயிர்கள் இல்லை; இந்த உலகம் இல்லை. அதனால்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று முன்னோர்கள் சொன்னார்கள்.
சமூகத்திற்கு எல்லாமாக இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் எப்படி ஒரு கிராமத்தை, ஓர் ஊராட்சியை, ஒரு மாவட்டத்தை மாற்றும் என்பதை ‘இந்தியாவின் நீர்வள மனிதர்’ ராஜேந்திர சிங் இவ்வாறு கூறுகிறார்:
“இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில், வற்றிப்போயிருந்த ஆறுகள் மீண்டும் பாயத் தொடங்கியுள்ளன. தூர்ந்து போனதால் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த கிணறுகள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு காலத்தில் தரிசாகக் கிடந்த வயல்களில் இப்போது பயிர்கள் செழித்து வளர்கின்றன. கிராம மக்கள் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்கள்.
பாரம்பரிய முறையில் மழைநீர் சேகரிப்பு நுட்பங்களை மீட்டெடுப்பது மற்றும் சிறிய தடுப்பணைகளைக் கட்டுவது மூலம் இந்த மாற்றத்தை அடைந்தோம். இதனால் முழு கிராமங்களும் புத்துயிர் பெற்றுள்ளன; வாழ்வாதாரங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
எனது சொந்த ஊர் உத்தரப் பிரதேசம், மீரட் அருகே உள்ள தௌலா கிராமம். நான் படித்தது ஆயுர்வேத மருத்துவம்தான். கிராமப்புற இந்தியாவுக்கு நீர்ப் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன். தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை தீர்ந்தால் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும், அதன் மூலம் கிராமம் முன்னேறும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன். நீர்வளம் மற்றும் பயிர்வகைகள் குறித்த தகவல்களைத் திரட்டினேன்.
வறட்சியினால் அதிகமாகப் பாதிக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் என் களப்பணியைத் தொடங்கினேன். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் சுரக்காத கிணறுகளை மீட்டெடுப்பதற்காக ‘தருண் பாரத் சங்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
மழைநீரைச் சேகரித்து, நிலத்தடி நீரை நிரப்பி, சிறிய நீரோடைகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் ‘ஜோஹத்’ எனப்படும் எளிய மண் தடுப்பணைகளைக் கட்டினோம். இந்தப் பணிகளில் அந்தந்த கிராம மக்களின் பங்களிப்பையும் கேட்டுப் பெற்றேன். ஒரு காலத்தில் வறண்டு கிடந்து கைவிடப்பட்ட அர்வாரி மற்றும் ரூபரெல் போன்ற ஆறுகள், எங்கள் தொடர்ச்சியான புதுப்பிக்கும் முயற்சிகளால் மீண்டும் உயிர்பெற்றுப் பாயத் தொடங்கின.
எங்கள் முயற்சிக்குச் சர்வதேச அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுகள் கிடைத்தன. நீர்நிலைகளைப் புதுப்பிக்கும் எங்கள் முயற்சிக்காக ‘ராமன் மகசேசே விருது’ மற்றும் ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ வழங்கப்பட்டன. எனது அமைப்பின் பின்னணியிலிருந்து கிராம மக்களை முடுக்கிவிட்டு, அவர்களையும் பங்கேற்கச் செய்ததில் நாங்கள் வெற்றி பெற்றோம். ‘இனி கிராம மக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள்’ என்ற நம்பிக்கை வரும்வரையில் அவர்களுடன் இணைந்து செயல்பட்டோம்.
கிராம மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்த நீர் கட்டமைப்புகளைக் கட்டவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்தக் கிராம மக்களை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாக்கும் பணியில் நேரடியாக ஈடுபடுத்துவதன் மூலம், திட்டங்களின் நீண்ட காலச் செயல்பாடுகள் நடந்தே தீரும். கிராம மக்கள் பொறுப்புகளை உணர்ந்து கொண்டால் அந்தப் பகுதியில் நீர்வளத்திற்குக் குறைவு ஏற்படாது.
தருண் பாரத் சங் பணிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்துள்ளன. ஆறுகளைப் புனரமைத்ததன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்குத் தீவனம் கிடைத்துள்ளது. வேலை மற்றும் வருமானம் தேடி மக்கள் இடம்பெயர்வது குறைந்துள்ளது. உணவுப் பாதுகாப்பு உறுதி பெற்றுள்ளது. கிராம மக்களுக்கு இப்போது பாசனத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது.
ஒரு காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது கிராமங்களில் சாபமாக இருந்தது. எங்களது முயற்சிகளில் அதிகாரத்துவத் தடைகள், சுயநல சக்திகளின் எதிர்ப்புகள் குறுக்கிட்டன. கடுமையான வறட்சி பெரிய சவாலாக எங்களை எதிர்த்து நின்றது. இருப்பினும், நாங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தளராமல் எதிர்நீச்சல் போட்டோம். பாரம்பரிய அறிவு, எளிய பொறியியல் யுக்திகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை நீர்ப்பற்றாக்குறையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும் என்பதை நிரூபித்தோம்.” என்கிறார்.
இந்தக் கட்டுரையைச் சுதந்திரன் என்பவர் எழுதியிருந்தார். சரி, இப்போது ஏன் ராஜேந்திர சிங் பற்றி இவ்வளவு பெரிய ஆராய்ச்சி நடக்கிறது? தாமிரபரணியைக் காப்பாற்ற மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான் அவரைப் பற்றித் தேட வைத்திருக்கிறது.
தாமிரபரணியில் நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் இதுதான்:
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களைப் பாதுகாக்கக் கோரியும் கடந்த 2018-ஆம் ஆண்டு நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தேன்.
இந்த வழக்கினைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024 அன்று தீர்ப்பு வழங்கினார்கள். உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை இந்து சமய அறநிலையத்துறை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், இந்த உத்தரவினை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த 10.11.2025 அன்று நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரில் வந்து சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்தும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, 02.01.2025 அன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மேலும் ஓர் ஆணையைப் பிறப்பித்தனர். அதன்படி, இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஆற்றில் கலக்கும் சாக்கடையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை; நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை இல்லை.
எனவே, தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றை ஈடுபடுத்தினோம். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை இந்தப் பணிக்கு ஆணையராக நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து, திட்டங்கள் செயல்படத் தேவையான திட்ட மதிப்பீட்டை வழங்குவார் எனக் கூறியிருந்தார்கள்.
இதையொட்டி 4 & 5.1.2026 (ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய நாட்களில் தாமிரபரணியில் அவர் ஆய்வு செய்ய வருகை புரிந்தார். அவருடன் மனுதாரரான நானும் (முத்தாலங்குறிச்சி காமராசு) மற்றும் இந்தி மொழிபெயர்ப்பாளர் இளங்கோ என்ற எனது நண்பரும் உடன் சென்றோம். இளங்கோ, மத்திய அரசின் காந்தவியல் ஆய்வு மையம் சார்பாக அண்டார்டிகா செல்லும் குழுவின் தலைவராக நான்கு முறை சென்று வந்தவர்.
3-ஆம் தேதி சனிக்கிழமை, வி.எம்.சத்திரம் காப்பர் லீப் ஹோட்டலில் வைத்துப் பல வல்லுநர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பொறியாளர் விதுபாலா, டாக்டர் சுரேஷ், வழக்கறிஞர் ஆயிரம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினோம். இரண்டு நாள் களப்பயணம் செய்வது குறித்துத் திட்டமிடப்பட்டது. மறுநாள் எங்களோடு பயணம் செய்ய மற்றொரு மொழிபெயர்ப்பாளர் வினோத் அவர்களும், புகைப்படக் கலைஞராக என்னுடைய சிஷ்யன் சுடலைமணிச்செல்வனும், நீர்மனிதரின் உதவியாளர் பாலாஜியும் இணைந்து கொண்டோம். எங்கள் பயணம் தாமிரபரணி மீட்புப் பயணமாகத் துவங்கியது.
குறிப்பிட்ட நேரத்தில் 4-ஆம் தேதி எங்கள் பயணம் துவங்கியது. சரியாக 6 மணிக்கெல்லாம் நாங்கள் ஹோட்டலை விட்டு கிளம்பிவிட்டோம். முதலில் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்தப் படித்துறைக்குச் சென்றோம். அங்கே தாமிரபரணி உழவாரப்பணி குழுவினரைச் சந்தித்தோம். அந்தக் குழுவினர் சிறுவர் முதல் பெரியவர் வரை காலை முதலே தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அவர்களைச் சந்தித்து ராஜேந்திர சிங் ஐயா உரையாற்றினார். “இதுபோன்ற இளைஞர்களும் வளரும் தலைமுறையினரும் தான் நதியைக் காப்பாற்றத் திரள வேண்டும்” என ஆர்வத்துடன் அவர்களிடம் பேசினார்.
வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட், அருகன்குளம் நாரணம்மாள் புரம் தன்னார்வலர்கள் சார்பில் டாக்டர் சுரேஷ் மற்றும் பெடல் வங்கி செந்தில் ஐயா ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்தக்குழுவினர் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜடாயு தீர்த்தம், இரண்டாம் ஞாயிறு மேலநத்தம், மூன்றாம் ஞாயிறு வண்ணார்பேட்டை, நான்காம் ஞாயிறு கீழநத்தம் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி கரையில் தூய்மைப் பணி செய்து வருகிறார்கள். சுமார் 21 மாதங்களாக இந்தப் பணி நடைபெறுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள். வருங்காலம் வளரும் சிறுவர்கள் கையில் தானே? இந்தப் பணி செய்து வரும் இவர்களை இந்தியாவின் நீர் மனிதர் ராஜேந்திர சிங் சந்தித்தது கூடுதல் பெருமை. இவர்கள் முயற்சியில் வி.எம்.சத்திரம் பீர்க்கன் குளம் தூர்வாரப்பட்டுள்ளது. அதையும் மறுநாள் காலை நீர் மனிதர் பார்வையிட்டார் என்பது கூடுதல் தகவல்.
அதன்பின் அங்கிருந்து கிளம்பி ராமையன்பட்டிக்குச் சென்றோம். ராமையன்பட்டிதான் மிக முக்கிய இடம். திருநெல்வேலி மாநகராட்சியின் மொத்தச் சாக்கடையையும் சேகரித்து வைக்கும் இடம். மொத்தமாகச் சாக்கடையைச் சேகரித்துச் சிந்தாமல் சிதறாமல் மீண்டும் தாமிரபரணியில் கலக்க வைக்கும் இடம். நீதியரசர்கள் வரும் வேளையில் இந்த இடங்களை ஓரளவு மெருகேற்றி வைத்திருந்தார்கள். ஆனாலும் சாக்கடை கலக்கும் இடங்கள் மோசமாக இருந்தன. அதைப் பார்வையிட்டார்கள் நீதியரசர்கள். அதுமட்டுமல்லாமல் சுற்றி வசிக்கும் மக்களும் அவர்களிடம் புகார் அளித்தனர். தற்போது 1 வருடம் இரண்டு மாதம் கழித்து இங்கே செல்கிறோம்; எந்தவித மாற்றமும் இல்லை. மாறாக நிலைமை மிக மோசமாக இருந்தது.
எங்களை ராமையன்பட்டியில் பஞ்சாயத்துத் தலைவர் டேவிட் தலைமையில் அவ்வூர் மக்கள் வரவேற்றனர். டேவிட் ஓர் இளைஞர், பல்வேறு பணிகளை மிகச்சிறப்பாகச் செய்து வருபவர். ராமையன்பட்டியில் நெல்லை மாநகராட்சி சாக்கடை சேர்த்து வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துத் தொடர்ந்து வாதாடி வருகிறார். என்னுடைய வழக்குடன் அவரது வழக்கும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக என்னுடைய வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி ஐயா கூப்பிடும் நேரமெல்லாம் தேவையான ஆவணங்களுடன் மதுரை உயர்நீதிமன்றம் சென்றுவிடுவார். தண்ணீர் பரிசோதனை உட்பட பல பிரச்சனைகளில் எங்களோடு இயங்கி வருபவர்.
நீர் மனிதரை ராமையன்பட்டி மக்கள் சந்தித்தனர். குறிப்பிட்ட சாக்கடை தேக்கம் உள்ள இடத்திற்குச் செல்லும் முன்பே நீர் மனிதரிடம் இங்குள்ள பிரச்சனைகளைக் கூறினார்கள். அவரும் கவனமாகக் கேட்டார். அந்த குடியிருப்பில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நல்ல நிலத்தடி நீர் கிடைத்ததாகவும், தற்போது துர்நாற்றம் வீசும் நீரே கிடைப்பதாகவும் புகார் கூறினார்கள். மொத்தமாகச் சாக்கடையை இங்கே தேக்கி வைத்து, மேலும் அசுத்தமாக்கி, கோடகன் கால்வாய் வழியாக விட்டு, இங்குள்ள குளங்களில் நிரப்பி, அதன்பின் மீண்டும் தாமிரபரணியை மாசுபடுத்துகிறார்கள் என்பதை நீர் மனிதர் கண்கூடாகப் பார்த்தார். சாக்கடை சுத்திகரிக்கும் இடம், தோல்வியுற்ற திட்டம், சாக்கடையை உள்ளே கொண்டு வரும் இடம், சாக்கடை அதிகமாக மாசுபடுத்தித் தண்ணீரில் கலக்கும் இடம் என ஒவ்வொரு இடத்தையும் சென்று பார்த்தார்.
அதன்பின் ராமையன்பட்டியில் கோடகன் கால்வாயில் வழியாக வரும் நல்ல தண்ணீரில் எப்படிச் சாக்கடையைக் கலந்து மாசுபடுத்துகிறார்கள் என்பதையும் டேவிட் காட்டினார். இதற்காக முதன்மைச் சாலையில் இறங்கிக் காட்டுப்பாதை வழியாக உள்ளே சென்றோம். ஐயாவும் அந்த முள்செடிகள் அடர்ந்த ஒத்தையடிப் பாதை வழியாக வருகை புரிந்தார். ஒரு காலத்தில் இங்குள்ள அக்ரஹாரத்து மக்கள் நீராடப் பயன்படுத்திய படித்துறை, சாக்கடை கலந்த காரணத்தினால் பயன்படுத்த முடியாமல் போனதை எடுத்துக்கூறினார் டேவிட்.
நீர் மனிதர் அதைப் பார்வையிட்டு விட்டு, அங்கிருந்து சத்திரம் புதுக்குளத்திற்கு வந்தார். அங்கே எங்கள் வரவை எதிர்பார்த்து யூடியூபர் கிருஷ்ணகுமார் காத்திருந்தார். இவர் தாமிரபரணி சாக்கடை கலப்பு குறித்து அதிகமான விழிப்புணர்வுப் பதிவுகளைப் பதிவிட்டு வருபவர். நன்றாக ஆங்கிலம் பேசினார். அவரும் தனது பங்குக்குத் தாமிரபரணி மாசு குறித்து ஐயாவிடம் பேசினார். ஐயா அது குறித்துத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டார்.
எதிர்ப் பகுதியில் நிறைய கொக்குகள் இருந்தன. “கொக்குகள் இருக்கும் இடம் நிச்சயம் அசுத்தம் நிறைந்த இடமாகத்தான் இருக்கும்” என நீர் மனிதர் எங்களிடம் கூறினார். அதுபோலவே அந்த குளத்தைச் சுற்றி மிக அதிகமான கொக்குகள் நின்றன. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதன்பின் தாமிரபரணி ஆற்றங்கரையில் உடையார்பட்டி எனும் இடத்திற்கு வந்தோம். இந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்பு முள்செடிகளை அகற்றி, மரக்கன்றுகள் நடப்பட்டன. துறவியர்கள் சபை சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ், லயன்ஸ் கிளப் தலைவர் பொன் திருமலை முருகன் ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சபாநாயகர் அப்பாவு அவர்களும், மேயர் ராமகிருஷ்ணன் அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்தனர். அவ்விடத்தில் சாக்கடை கலக்கும் இடத்தைப் பார்த்துக்கொண்டே அடுத்த இடத்திற்கு வந்தோம்.
சிந்துபூந்துறையில் உள்ள மின்மயானம் எதிரே கட்டப்பட்டுள்ள சாக்கடை சுத்திகரிப்புத் தொட்டி செயலற்று, நேரடியாகச் சாக்கடை நீர் ஆற்றில் கலக்கும் அவலநிலையைப் பார்வையிட்டார். இவ்விடத்திற்குத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்திருந்தார். அவரிடம் தாமிரபரணியைப் பற்றிப் பேசினேன். மத்திய அரசிடம் பேசி நிதி வழங்க ஆவணம் செய்யக் கோரியிருந்தேன். அந்தச் சமயத்தில் பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள்; இன்றும் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். கிருஷ்ணகுமார் சாக்கடைக்குள் கையை விட்டு அதன் மோசமான நிலையை எடுத்துக்கூறினார். அதன்பின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார் ராஜேந்திர சிங்.
அதில், ஒரு மாதத்திற்குள் இதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் சார்பில் தந்தி டிவி விக்னேஷ், “தாமிரபரணி பணி முடியும் வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்குத் தனி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்துக் கண்காணிக்க வேண்டும்; பணி முடியும் வரை அவரைப் பணிமாற்றம் செய்யக்கூடாது” எனக்கோரிக்கை வைத்தார். அதை அமைதியாகக் கேட்டவர், “தாமிரபரணி பிரச்சனையைத் தீர்த்துவிடலாம். நான் ஓடாத நதிகளையே ராஜஸ்தானில் ஓட வைத்தவன். தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அது மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியைப் போல இருக்கிறது. எனவே அதைக் காப்பாற்றுவது சுலபம் தான். தாமிரபரணியைக் காப்பாற்றுவது எனது முதல் வேலை” எனப் பேசினார்.
அதன்பின் ஜானகிராம் ஹோட்டலில் காலை உணவை முடித்தோம். தொடர்ந்து எங்கள் குழுவின் ஆய்வுப் பணி துவங்கியது. பரணி ஹோட்டல் எதிரே திருநெல்வேலி நகரச் சாக்கடை முழுவதும் ஆற்றில் கலக்கும் இடத்தைக் காட்டினோம். நகரத்தில் உள்ள விடுதிகள் உட்படப் பல பகுதிகளிலிருந்து நேரடியாகக் கலக்கப்படும் மலம் உள்ளிட்ட மோசமான கழிவுகள் இதன் வழியாகக் கலக்கின்றன என்ற விவரத்தை அவருக்கு உரைத்தோம். மேலும் மாநகராட்சி பணிகள் மந்தமாக நடைபெறுவதையும் சுட்டிக்காட்டினோம். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி மீனாட்சிபுரம் வந்தோம்.
மீனாட்சிபுரத்தில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை சுத்திகரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தோல்வியடைந்து சாக்கடை நேரடியாக ஆற்றில் கலப்பதைப் பார்த்தார். ஓரிடத்தில் இல்லை, பல இடங்களில் சாக்கடை நேரடியாக ஆற்றில் கலந்தது. அங்குள்ள படித்துறைகளையும் பார்வையிட்டார். சாக்கடையைச் சுத்திகரிக்க அவ்விடத்தில் போடப்பட்டிருந்த புதிய திட்டங்கள் தோல்வியடைந்ததையும் பார்த்தார். அதன்பின் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.
அதன்பின் அங்கிருந்து குறுக்குத்துறை இசக்கியம்மன் படித்துறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து தாமிரபரணி கரையில் உள்ள படித்துறைகளைக் காட்டினோம். காசியைப் போலவே இங்குள்ள படித்துறைகள் சிறப்பானவை. இங்கே ஓடும் தாமிரபரணி உத்தரவாகினியாகவும் தட்சிணவாகினியாகவும் காட்சியளிக்கிறது. அங்கே மக்கள் மகிழ்ச்சியுடன் சிறு குழந்தைகளோடு நீராடும் காட்சி நடந்துகொண்டிருந்தது. அர்ச்சகர்கள் திதி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நீர் மனிதரிடம் பேசி, நதியின் பெருமையைக் கூறி, அது சாக்கடை கலந்த நதியாக மாறிவிட்டதைச் சீர்செய்ய வேண்டினர். மேலும் மண்டபங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அரசு அவற்றைச் சீர்செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.
அங்குள்ள முருகன் கோயில் நீராழி மண்டபத்தை அவர் பார்த்தார். அதன் தொழில்நுட்பம் அவரை வியக்க வைத்தது. தாமிரபரணி தண்ணீர் அந்த மண்டபத்திற்குள் ஓடி வருவதும், அதில் மக்கள் நீராடுவதும், அருகில் கல்படுகைகள் இருப்பதும் அவரை ஈர்த்தன. முற்காலத்தில் சித்தர்கள் இவ்விடத்தில் நீராடித் தவமியற்றியுள்ளனர் என்பதை விளக்கினோம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மண்டபம் இடிந்து வருவதையும் அவர் பார்த்தார். அதன்பின் குறுக்குத்துறை முருகன் கோயில் குறித்து எடுத்துரைத்தோம். இங்குள்ள பாறை மிகவும் விசேஷமானது; இங்கிருந்துதான் திருச்செந்தூர் கோயிலுக்குச் சிலை செதுக்கிக் கொண்டு செல்லப்பட்டது. மழைக்காலத்தில் இக்கோயில் வெள்ளத்தில் மூழ்கிவிடும் என்பதை விளக்கினோம்.
தொடர்ந்து அங்கிருந்து மேலப்பாளையம் சென்றோம். மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டையில் கலக்கும் சாக்கடை, பாளையங்கால்வாயைச் சாக்கடை நதியாக மாற்றி மீண்டும் தாமிரபரணியில் கலக்கச் செய்கிறது. மேலப்பாளையம் ஒவ்வொரு தெருவிலிருந்தும் நேரடியாகக் கால்வாயில் கலக்கும் சாக்கடையைக் காட்டினோம். பொதுமக்களும் தங்களின் மனவேதனையைக் கூறினர். நீர் மனிதர், “சாக்கடை நீரும் குடிநீரும் ஒன்றாகக் கலக்கவே கூடாது. தனித்தனி கால்வாய்கள் அமைக்க வேண்டும்” என்றார். மேலப்பாளையம் சாக்கடை முழுவதையும் சேகரித்துச் சுத்திகரித்து, வறட்சியான நாங்குநேரி, திசையன்விளை பகுதி விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என்பதை விவாதித்தோம்.
அடுத்து கேசவசமுத்திரம் சென்றோம். இந்தப் பேரூராட்சியில் வீடுகளில் உள்ள சாக்கடை அனைத்தும் நேரடியாகக் கன்னடியன் கால்வாயில் கலந்து, பின் தாமிரபரணியில் சேருகிறது. அங்கே முருகன் அண்ணன் தலைமையில் திரண்டிருந்த மக்கள் பிரச்சனைகளைக் கூறினர். சாக்கடையைத் தனியாகக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என நீர் மனிதர் குறிப்பிட்டார்.
அடுத்து சேரன்மகாதேவி மற்றும் கல்லிடைக்குறிச்சி சென்றோம். அங்கேயும் கன்னடியன் கால்வாயில் சாக்கடை நேரடியாகக் கலக்கும் அவலநிலையை வேதனையோடு பார்த்தார். ஒரு காலத்தில் மக்கள் நீராடப் பயன்படுத்திய கால்வாய், இப்போது சாக்கடைக்குழாய்கள் மூலம் மாசுபடுத்தப்படுவதைக் கண்டு வருந்தினார்.
நீர் மனிதர் அங்கிருந்த படித்துறையில் அமர்ந்தார். பசுமை முதன்மையாளர் விருது பெற்ற லூர்து மணி அவர்களை அறிமுகம் செய்தோம். அவர் ஆற்றுக்குள் மக்கள் போடும் துணிகளை அள்ளி அகற்றுவது, மரம் வளர்ப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். நீர் மனிதர் அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவினார். ஏ.ட்ரி (ATREE) நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து பறவை மற்றும் மீன் கணக்கெடுப்பு, இயற்கை பாதுகாப்பு குறித்து விளக்கினர்.
அதன்பின் காரையாறு பகுதிக்குச் செல்ல முடிவு செய்தோம். வனத்துறை அதிகாரி குணசீலன் தலைமையில் வனக்காவலர்கள் எங்களுக்கு உதவினர். பாபநாசம் மேலணைக்குச் சென்று தண்ணீர் சுத்தமாக இருக்கும் இடத்தையும், அணை கட்டப்பட்டுள்ள விதத்தையும் பார்த்தார். சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை காலத்தில் நதி எவ்வாறு மாசுபடுகிறது என்பதை வனத்துறையினர் விளக்கினர். லோயர் கேம் மற்றும் அகத்தியர் அருவி பகுதிகளில் ஆய்வு செய்தோம்.
தொடர்ந்து பாபநாசத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கூடல் அரசன் மற்றும் வீரபுத்திரன் ஆகியோர் காத்திருந்தனர். பாபநாசம் நதி தரைக்கு வந்து சேரும் முதல் இடத்திலேயே பக்தர்கள் ஆடைகளை எறிந்து மாசுபடுத்தும் அவலத்தைப் பார்த்தார். மேலும் லாட்ஜ்கள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாகக் கலப்பதையும் கேட்டறிந்தார். உதவியாளர் பாலாஜி அனைத்துத் தகவல்களையும் குறித்துக்கொண்டார். முதல் நாள் ஆய்வு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் உறுப்பினர்கள், அருகன்குளம் நாரணம்மாள் புரம் தன்னார்வலர்கள் சார்பில் முனைவர் சுரேஷ் மற்றும் பெடல் வங்கி செந்தில் ஐயா ஆகியோர் காத்திருந்தனர். இந்தக் குழுவினர் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜடாயு தீர்த்தம், இரண்டாம் ஞாயிறு மேலநத்தம், மூன்றாம் ஞாயிறு வண்ணார்பேட்டை, நான்காம் ஞாயிறு கீழநத்தம் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி கரையில் தூய்மைப் பணி செய்து வருகிறார்கள். சுமார் 21 மாதங்களாக இந்தப் பணி நடைபெறுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள். ‘வருங்காலம் வளரும் சிறுவர்கள் கையில் தானே’ – இந்தப் பணி செய்து வரும் இவர்களை இந்தியாவின் நீர் மனிதர் ராஜேந்திர சிங் சந்தித்தது கூடுதல் பெருமை. இவர்கள் முயற்சியில் வி.எம். சத்திரம் பீர்க்கன் குளம் தூர்வாரப்பட்டுள்ளது. அதையும் இந்தியாவின் நீர் மனிதர் பார்வையிட்டார். அப்போது ஏ.ட்ரி (ATREE) அமைப்பைச் சேர்ந்த மதிவாணன் அவர்களும் பார்வையிட வந்தார்கள். அவர்களோடு தாமிரபரணி குறித்த சில ஆலோசனைகளை நீர் மனிதரிடம் கூறினோம். தொடர்ந்து முறப்பநாடு நோக்கி நாங்கள் நகர்ந்தோம்.
முறப்பநாடு பகுதியில் எங்களை எதிர்நோக்கி பஞ்சாயத்து எழுத்தர் பாலாஜி, வசவப்பபுரம் கணேசன் உட்பட பலர் காத்திருந்தனர். முறப்பநாடு ‘தென்னகத்தின் கங்கை’ எனப் போற்றப்படும் இடம்; நவகயிலாயங்களில் நடுக் கயிலாயம். இந்த இடத்தில் 2018-இல் மகா புஷ்கரம் நடந்தபோது 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடினார்கள். எனவே, தாமிரபரணியின் முக்கிய இடமாகக் கருதப்படும் இது, தற்போதும் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் மக்கள் அதிக அளவில் நீராடும் இடமாக உள்ளது. மக்கள் தங்களது ஆடைகளைக் களைந்து ஆற்றுக்குள் எறிந்து விடுகிறார்கள். இவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்விடத்தில் பல இடங்களுக்குக் குடிதண்ணீர் கொண்டு செல்ல உறிஞ்சுகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு தடுப்பணை முறப்பநாட்டில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்கப்பட்டியிலும் தடுப்பணை உள்ளது. இந்தத் தடுப்பணைகளால் சாக்கடைத் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகத் தூர்ந்து காட்சியளிக்கிறது. “நதியில் இதுபோன்ற தடுப்பணைகள் கூடாது” என நீர் மனிதர் கூறினார். “ஓடும் நீரை அப்படியே ஓடவிட்டால் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்; அதைத் தடுத்து வைத்தால் தேங்கும் சாக்கடைகள் நீரை மாசுபடுத்திவிடும்” என அவர் கூறினார்.
தொடர்ந்து நாங்கள் அங்கிருந்த மக்களிடம் தகவல்களைக் கேட்டுவிட்டுத் ஸ்ரீவைகுண்டத்தில் மக்களைச் சந்தித்தோம். ஏற்கனவே எங்களுக்குத் தாமிரபரணி சுத்தப்படுத்த உதவி புரிந்த குழுவினர் அங்கே இருந்தார்கள். குறிப்பாக வியாபாரிகள் சங்கம், அறங்காவலர் சந்துரு, முன்னாள் பேரூராட்சித் தலைவர் கந்தசுப்பு, சமூக சேவகர் சித்திரை வேல் உட்படப் பல நண்பர்கள் வருகை தந்தனர். முதலில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை அவரிடம் காட்டினோம். இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணையாகும்.
இந்த அணைக்கட்டைப் பார்த்தவுடன், “இது அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியான முறையில் கட்டப்பட்ட அணை அல்ல” என அவர் கூறினார். ஏனெனில், மருதூர் அணையில் 12 மணல்வாரிகள் (Sluices) அணையின் அனைத்து இடங்களிலும் இருக்கும். ஆனால் இங்கோ வடபுறமும் தென்புறமும் மட்டும்தான் நீர் போக்கிகள் உள்ளன. எனவே, மழைக்காலங்களில் மணல் தூர்வாரப்படாமல் தேங்கி அணைக்கட்டின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது என்று கூறினார். அது உண்மை என்பது போலவே, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு அடிக்கடி மணல்மேடாகிறது. இதைத் தூர்வாருவதாகக் கூறி மணல் அள்ளப்பட்ட கதைகளும் உண்டு. அதன் பிறகு அங்கிருந்து ஆற்றின் ஓரம் பேரூராட்சி மூலம் கொட்டப்படும் கழிவுகளைப் பார்வையிட்டார். ஊர் மக்கள் இந்தக் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துப் புகார் செய்தனர். அவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து ஆழ்வார்திருநகரியில் ஒரே இடத்தில் பேரூராட்சி கழிவுகள் அனைத்தும் மடையில் இருந்து தண்ணீர் வருவது போலத் தாமிரபரணியில் கலக்கும் காட்சியைப் பார்வையிட்டார். அதன் பின் ஏரல் சென்றோம்.
ஏரலிலும் பேரூராட்சி சம்பந்தப்பட்ட அனைத்துச் சாக்கடைகளும் அப்படியே தாமிரபரணியில் விடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மொத்தக் கழிவுகளையும் அங்கேயே கொட்டி வைத்துள்ளார்கள். அதைப் பார்வையிட்டு விட்டு, அங்கிருந்து ஆத்தூர் கிளம்பினோம். ஆத்தூர் செல்லும் வழியில், உமரிக்காடு பகுதியில் ஒரு தடுப்பணை உள்ளது என்று கூறினோம். அந்தத் தடுப்பணையைப் பற்றி அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
அதன்பின் அவரை ஆத்தூருக்கு அழைத்து வந்தோம். ஆத்தூர் வரும்போதே அவர் மிகவும் சோர்வாகிவிட்டார். தொடர்ந்து சாக்கடை கலக்கும் நதியின் நிலையைப் பார்த்து அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. அவரது குழுவினர் ஆத்தூரில் சாக்கடை கலக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். எங்களோடு ஏரல் நகரைச் சேர்ந்த ஜெயபால், எனது நண்பர் பாடகர் காமராஜ் காந்தி, முன்னாள் கவுன்சிலர் உட்படப் பலர் வந்தனர். பத்திரிகையாளர்கள் நீர் மனிதரைப் பேட்டி கண்டனர். அதன்பின் அங்கிருந்து தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் புன்னக்காயல் முகத்துவாரத்தில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடலில் சங்கமிக்கும் இடத்தில் உள்ள கருப்பு மணலையும், அருகிலுள்ள வெள்ளை மணல் மற்றும் தண்ணீரையும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், தாமிரபரணி கடலில் சேரும் இடத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தன. இவை அனைத்தும் நதி மூலமாகவே வந்துள்ளன. கடந்த முறை சென்றபோது நான் கருப்பு மணலைக் காணவில்லை; அப்போது இந்த அளவிற்கு நதி மாசுபடவில்லை. ஆனால் தற்போது அதிகமாக மாசுபட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதை ராஜேந்திர சிங் ஐயாவும் அறிந்திருப்பார். எனவே, அவர் மௌனத்துடன் அனைத்தையும் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் நீர் மனிதர் ராஜேந்திர சிங் அவர்களுடன், எம்பெருமைக்குரிய பொருநை அன்னை கடலுடன் சேரும் சங்குமுகத்தில் நின்றபோதும், என் அன்னைக்கு விடிவுகாலம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அன்னையை வணங்கி அவள் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்ட போதும் நெகிழ்ச்சியாக இருந்தது. என்னோடு ஐயாவின் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் இளங்கோ, வினோத், ஓட்டுநர் முருகன் ஆகியோர் வந்தனர். சிஷ்யன் காமராசு செல்வன் அருமையான புகைப்படங்களை எடுத்துத் தந்தான். இதற்கான வழக்கைத்தொடர்ந்த அன்பு நண்பர் டாக்டர் அழகுமணி அவர்களுக்கும், ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்த நீதியரசர்கள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அவர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
ஐயாவைப் பொறுத்தவரை மாணவர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி மாணவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தாளாளர் முனைவர் சங்கரநாராயணன் மற்றும் முதல்வர் முனைவர் விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். “உணவு கூட வேண்டாம், மாணவர்கள் சந்திப்புதான் முக்கியம்” என ஐயா கூறிவிட்டார். கடலுக்குச் சென்று வந்த களைப்பும் பசியும் ஒருபுறம் இருந்தாலும், நாங்கள் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் வந்து சேர்ந்தோம். சுமார் 250 மாணவ மாணவிகள் அங்கே இருந்தார்கள்.
ராஜேந்திர சிங் அவர்களை மாணவர்களிடம் நான் அறிமுகம் செய்து வைத்தேன். மாணவர்கள் அனைவரும் அமைதியாகவும் ஆர்வத்துடனும் கேட்டனர். அதன் பின் மாணவர்களிடம் உரையாடத் தொடங்கினார். அவர் பேசும்போது, “தாமிரபரணி நதி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. உயிரற்ற நதியைக் கூட ராஜஸ்தானில் மீட்டெடுத்திருக்கிறோம். எனவே இங்கே தாமிரபரணியை மீட்டெடுப்பது மிக எளிது. ஆனால், தற்போது இது மருத்துவமனையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. எனவே நாம் அனைவரும் இணைந்து அதை மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசினார்.
மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஐயா உற்சாகமாகப் பதிலளித்தார். கடலுக்குச் சென்றபோது களைப்புடன் இருந்தவர், மதிய உணவு உண்ணாமல் இருந்தும் கூட மாணவர்களிடம் பேசும்போது மிகுந்த உற்சாகமடைந்தார். நாங்களும் எப்படியும் நதி சுத்தமாகிவிடும் என நம்பிக்கையோடு இருந்தோம்.
சரியாக 4 மணிக்கு நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம். எங்களுக்கு உணவைக் கல்லூரி நிர்வாகம் அன்போடு ஏற்பாடு செய்திருந்தது. நதியைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தக் கல்லூரித் தாளாளருக்கு முக்கியப் பங்கு உண்டு. மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடியவர்களில் தாளாளர் சங்கரநாராயணன் ஐயாவும் ஒருவர். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இவர் நல்லகண்ணு ஐயாவோடு இணைந்து போராடும்போது இவர்களது வழக்கறிஞராக இருந்தவர் தற்போதைய நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி அன்னை தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ள எப்படியெல்லாம் மக்களைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது.
அடுத்து அங்கிருந்து கிளம்பினோம். இந்தியாவின் நீர் மனிதர் ராஜேந்திர சிங் அவர்கள் செய்துங்கநல்லூரில் உள்ள எனது ஸ்டுடியோவிற்கு வருகை புரிந்தார். அவருக்கு எனது ‘நெல்லை மாவட்ட வரலாறு’ நூலைக் கொடுத்து வரவேற்றேன். அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தோம். அந்தப் பொன்னாடையை அவர் எனக்கே போர்த்தி கௌரவப்படுத்தினார். என்னுடன் ஸ்டுடியோவில் பணியாற்றும் எனது சிஷ்யன் காமராசு செல்வன், பேத்தி அமுதா ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவரது உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் இளங்கோ மற்றும் பிரவீன் ஆகியோரும் உடன் வந்தனர்.
ஐயாவோடு மூன்று நாட்கள் பயணம் செய்த அந்த நாட்கள் மிகவும் பொன்னான நாட்கள்; வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். விரைவில் தாமிரபரணி சுத்தமாகும் என நம்பிக்கையுடன் உள்ளோம்இரண்டு நாட்கள் நாங்கள் ஆய்வு செய்த இடங்களைப் பற்றி மீண்டும் அவரது உதவியாளர் பாலாஜி அவர்களோடு அசைபோட்டோம். மறுநாள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் முழுவதும் இந்தச் செய்திதான் நிறைந்திருந்தது. பல செய்திகளை அழகாக வெளியிட்டிருந்தார்கள். அந்தச் செய்திகளையெல்லாம் தொகுத்துத் தருகிறோம்:
ராஜேந்திர சிங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: “தற்போது ஆய்வு செய்த சுமார் 25 இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்ப ஆற்றில் தூய்மையை மீட்டெடுக்க அறிக்கை தாக்கல் செய்யப்படும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு மூலமாகவோ அல்லது கழிவுநீர் ஓடைகள் மூலமாகவோ கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியும்.
தாமிரபரணி ஆற்றின் அடையாளம் பாபநாசத்தில் தொடங்கி முடியும் பகுதி வரை தடையின்றி இருக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் வாழ முடியும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பம்பிங் செட்டுகள், தடுப்பணைகள் போன்றவை இயற்கையோடு ஒத்திசைந்து இல்லாததால் தற்போது தாமிரபரணி அழிவு நிலைக்குச் சென்றுள்ளது. எனினும், பொதுமக்களாகிய நாம் அனைவரும் இணைந்து இதை மீட்டெடுப்போம்” என்றார்.
‘இந்தியாவின் நீர் மனிதன்‘ ராஜேந்திர சிங் வழங்கிய விரிவான தகவல்கள்:
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை: நதியைத் தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய உயர்நீதிமன்றம் எனக்குப் பொறுப்பு வழங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நான் நேரில் ஆய்வு செய்தபோது, நதி மிகுந்த மாசடைந்து இருப்பதைக் கண்டேன். இது குறித்துத் தாமிரபரணி மக்கள் மற்றும் ஊடகங்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், நீதிமன்றத்திற்கு நீங்கள் என்ன ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்?
முந்தைய முயற்சிகளின் தோல்வி: கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 முதல் 7 மாவட்ட ஆட்சியர்கள் தாமிரபரணியைச் சுத்தம் செய்யப் பல திட்டங்களை முன்னெடுத்தனர். சுமார் 100 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; தொப்பிகள், டி-ஷர்ட்டுகள் வழங்கப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், அந்தந்த ஆட்சியர்கள் மாற்றப்பட்டதும் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஒரு நிலையான குழுவோ அல்லது அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரியோ இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.
ராஜேந்திர சிங் முன்வைக்கும் 3 முக்கிய தீர்வுகள்:
- தனி நோடல் அதிகாரி: நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தற்காலிகமாகச் செய்யாமல், தொடர்ச்சியாகக் கண்காணிக்க ஒரு தனி ‘நோடல் அதிகாரி’ நியமிக்கப்பட வேண்டும். அந்த அதிகாரி நதி முழுவதையும் தூய்மையாக வைத்திருப்பதற்கும், நதி நீர் தடையின்றி ஓடுவதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
- கழிவுநீரைத் தனியாகப் பிரித்தல்: மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரைக் கலப்பது மிகப்பெரிய தவறு. சுத்தமான நீர் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றுக்குத் தனித்தனி அமைப்புகள் இருக்க வேண்டும். நதிக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தால் மட்டுமே நதியை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியும்.
- நதி அறிவு இயக்கம்: நதியின் ஆரோக்கியம் என்பது மனித ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சூழலியலோடு நேரடியாகத் தொடர்புடையது. எனவே, பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் ‘நதி அறிவு’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியைத் தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதினால் மட்டுமே தூய்மைப் பணிகள் முழுமை பெறும்.
தாமிரபரணியின் மூன்று சவால்கள்: நதியை மீட்பதில் மூன்று முக்கியத் தடைகள் உள்ளன:
- ஆக்கிரமிப்புகள்
- மாசுபாடு
- ஊழல் – பல திட்டங்கள் காகித அளவில் அழகாக இருந்தாலும், களத்தில் அவை செயல்படுத்தப்படுவதில்லை.
கங்கையுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஒரு சிறிய நதி. மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்தப் பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தாமிரபரணி நதி குறித்த தனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் (ஒரு மாதத்திற்குள்) உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தாமிரபரணி நதிக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தாமிரபரணி விரைவில் அழிந்து போகும் அபாயம்” – நீர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை! தாமிரபரணி ஆற்றை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது என்று ராஜேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார். மற்றொரு பத்திரிகைப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “தாமிரபரணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நதியைப் பராமரிப்பதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. பொதுமக்கள் குப்பைகளை நதியில் கொட்டாமல் இருக்க வேண்டும். கடந்த 80 ஆண்டுகளில் ஆற்றின் வடிவம், சுற்றுச்சூழல் மற்றும் ஓட்டம் பெருமளவில் மாறியுள்ளது. ஆற்றின் பாதை மாறும்போது பெரிய அளவிலான பேரிடர்களைச் சந்திக்க நேரிடும். நீதிமன்றமும் அரசும் தீவிரமாகக் கண்காணித்து ஆற்றைப் பராமரிக்க வேண்டும்.”
- முத்தாலங்குறிச்சி காமராசு


