2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி இன்று காலை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது : கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பொதுத்தேர்வை, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19,095 மாணவர்கள் எழுதினர். இதில் 8,448 மாணவர்களும், 10,647 மாணவிகளும் அடங்குவர்.
தேர்வு முடிவுகளின்படி:
தேர்ச்சி பெற்றவர்கள்: 18,568 பேர் (8,070 மாணவர்கள், 10,498 மாணவிகள்).
தேர்ச்சி சதவீதம்: 97.24%.
மாநில அளவிலான இடம்: 6-வது இடம்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் 96.19 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9-வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது 97.24 சதவீத தேர்ச்சியுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 207 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.
அரசுப் பள்ளிகளின் சாதனை:
மாவட்டத்தில் உள்ள 57 அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 20 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று அபார சாதனை படைத்துள்ளன.


