தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் மீண்டும் தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் மே 7-ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எனது நேரடி மக்கள் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன.
தற்போது கோடைக்காலம் நிலவுவதால், மாநகரப் பகுதி மக்களுக்குத் தடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகத் தொடங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டிருந்த சாலை மேம்பாட்டுப் பணிகளை மீண்டும் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் துறைமுகம் இணைந்து புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைத்து வரும் பூங்கா பணிகள் மற்றும் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். திமுக தலைவருக்கும், கட்சித் தலைமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எங்களது மக்கள் பணிகள் அர்ப்பணிப்புடன் தொடரும்” என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி இந்தச் சந்திப்பின் போது உறுதிபடத் தெரிவித்தார்.


