தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் பாரதப் பிரதமரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக கார் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். அவரை, அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி அன்புடன் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்வின் போது, தேர்தல் களம் மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாகத் தெரிகிறது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் எனப் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.


