தூத்துக்குடி பிரையன்ட் நகரில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் (திருநெல்வேலி கோட்டம்) மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10 மாடி அடுக்குமாடி காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மொத்தம் 100 வீடுகளைக் கொண்ட இந்த நவீன குடியிருப்புகள், காவலர்களின் நலன் கருதி அரசு உத்தரவின் பேரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், புதிய குடியிருப்பில் குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் குமரேசன், தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல் வி.கோபால், நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட முக்கியப் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


