திருச்செந்தூரில் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதன் காரணமாக திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி மார்க்கமாக வரும் வாகனங்கள் வீரபாண்டியபட்டணம் வரை வரிசையாக அணிவகுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


