தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் பொன் விழா அரங்கில் உள் தர மதிப்பீட்டு குழு (IQAC) சார்பில் “இந்திய அறிவு அமைப்பு (IKS): புதுமை, உள்ளடக்கிய மற்றும் முழு வளர்ச்சிக்கான பாதை (IKSIIHD)” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வர். த.கனகராஜ் வரவேற்புரையாற்றினார்.
அருணா கார்டியாக் கேர், நிர்வாக இயக்குநர் ஆ.சுவர்ணலதா அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை பற்றி சிறப்பு உரையாற்றினார். துவக்க விழாவில் பி.ராமன், முதன்மை செயலாக்க அலுவலர், அருணா கார்டியாக் கேர், கலந்து கொண்டு, மதிப்புகள் மூலமான கல்வி வழியாக முழுமையான வளர்ச்சி பெறுவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக இரண்டு அமர்வுகள் நடைபெற்றன. முதலாம் அமர்வு “நிலையான மற்றும் உள்ளடக்கிய புதுமைக்கான ஊக்கியாக இந்திய அறிவு அமைப்பு” என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்வமர்வில் அருணாசலப் பிரதேசம், விவேகானந்த கேந்திரா ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர், ஆ.நீதிபெருமாள் அவர்கள் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் அமர்வில் மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான யு.வெளியப்பன் “முழுமையான வளர்ச்சிக்காக இந்திய அறிவு அமைப்பை நவீன கல்வியுடன் ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் பேசினார்.
கருத்தாளர்கள் இந்திய அறிவு அமைப்பின் கோட்பாட்டுச் சட்டங்கள், நடைமுறை பயன்பாடுகள் மற்றும் கல்வித் துறையில் அதன் கொள்கை விளைவுகளை விரிவாக விளக்கினார்கள்.
ராஜலட்சுமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சண்முக நாராயணன் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையின் (பொறுப்பு) தலைவர் சியாமளா தேவி ஆகியோர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் அமர்விற்குத் தலைவர்களாகச் செயல்பட்டனர். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 149 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை முதல்வர் த.கனகராஜ் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைப்பாளரும் பொருளறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான சே.குரு வாசுகி, உதவி ஒருங்கிணைப்பாளரும் உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான ந.அல்லிமுத்து மற்றும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் கு.ராஜாதுரை ஆகிய இணை அமைப்புச் செயலாளர்கள் செய்திருந்தனர்.


